தமிழகத்திற்கு அதிக நிதி..3.5 லட்சம் கோடி தமிழக பட்ஜெட்..1000 கோடி ஒதுக்க முடியாதா? அன்புமணி காட்டம்
கோவை: கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மூலம் தமிழகத்திற்கு கூடுதலான திட்டங்களும் கூடுதல் நிதி ஒதுக்கிடும் கொடுத்துள்ளார்கள் எனவும், தமிழக அரசு ஆண்டு தோறும் மூன்றரை லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறீர்கள், ஆயிரம் கோடி ரூபாய் மழை வெள்ளத்திற்காக ஒதுக்கீடு செய்ய முடியாதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை சென்றுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்றார். தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,” தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை கிட்டத்தட்ட 34 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 2022 செப்டம்பர் மாதம் 26 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது, 2023 ஜூலை மாதம் 2.1 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. 2024 ஜூலை மாதம் 4.8 விழுக்காடு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இதனால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஏழே முக்கால் கோடி மக்களுக்கும் பாதிப்பு. முதலமைச்சர் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், குறைக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முடியாத ஒரு சூழல் உருவாகிவிடும். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் மாதம் மின் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று சொன்னார்கள். அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.
இப்போது காவிரியில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும். இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அத்தனை நீரும் கடலுக்கு தான் செல்ல உள்ளது. கடந்த 57 ஆண்டு காலமாக ஆட்சி செய்த திராவிட கட்சிகளுக்கு இந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை. எவ்வளவோ திட்டங்கள் நிலுவையில் உள்ளது, அதற்கெல்லாம் முக்கியத்துவம் கிடையாது. இப்போது குறுவை சாகுபடி சரியான முறையில் நடக்கவில்லை, காரணம் தண்ணீர் இல்லை. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டு திறக்கவில்லை இப்போது தண்ணீர் நமக்கு வந்துள்ளது.
கோவை பகுதியில் கனிமவள கொள்ளை மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ போராட்டம் நடத்தி உள்ளது. தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பால் தான் இந்த கனிம வள கொள்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்று நம்முடைய கனிம வளத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது செங்கல் சூளையாக இருந்தாலும் சரி, வேறு எதற்காக இருந்தாலும் சரி கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் கிடைக்கக்கூடிய வருமானம் அனைவருக்கும் செல்கிறது, தமிழக அரசு மெத்தனமாக உள்ளது.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா கிடைத்திருக்கிறது. முதலமைச்சரிடம் இது குறித்து எவ்வளவு முறை புகார் கொடுத்தாலும் ஏதோ ஒரு கூட்டத்தை நடத்துகிறார். அதன் பிறகு கஞ்சா விற்பவர்கள் யாரையும் பிடித்ததாக தெரியவில்லை, ஆனால் கஞ்சா 1.0 2.0 3.0 4.0 என அப்போ அப்போ ரெய்டு மட்டும் நடக்கிறது. அதில் ஒரு 5000 பேர் பிடிக்கிறார்கள், பிடித்து 15 நாட்களில் அவர்கள் வெளியே வந்து விடுகிறார்கள்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து ஆகின்ற சூழல் வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையில் எடுத்தால், அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, நீங்கள் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினீர்களா என்று தான் கேட்பார்கள். எந்த அதிகாரத்தில் இந்த சட்டம் இருக்கிறது அதாவது இதே கேள்வியை தான் கடந்து 2010 இல் கேட்டார்கள், ஒன்பதாவது அட்டவணையில் நமக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொன்னால் அதற்கு மறுப்பு கிடையாது.
மத்திய அரசு 48 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு உள்ளது, இந்த பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எதுவும் வராதா என்ன? இதுவரைக்கும் தாக்கல் செய்யப்பட்ட ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் சொல்லி இருக்கிறார்களா? காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்யும் போது இவ்வளவு காலம் பட்ஜெட் போட்டு உள்ளது, அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் அவர்கள் சொல்லி இருக்கிறார்களா?
இந்த பட்ஜெட்டை பொருத்தவரைக்கும், கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை விட, இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மூலம் தமிழகத்திற்கு கூடுதலான திட்டங்களும் கூடுதல் நிதி ஒதுக்கிடும் கொடுத்துள்ளார்கள். இன்னும் சிறிது காலத்தில் அது என்னென்ன என்பது நமக்கு தெரிந்துவிடும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ரயில்வே துறையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் 6500 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 200 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளார்கள்.
கடந்த முறை மழை வெள்ளத்தின் போது கூட தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நான் கோரிக்கை வைத்தேன். அது ஒரு புறம் இருக்கட்டும், நான் இப்போது தமிழக அரசைப் பார்த்து கேட்கிறேன், நீங்கள் ஆண்டு தோறும் மூன்றரை லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகிறீர்கள், ஆயிரம் கோடி ரூபாய் மழை வெள்ளத்திற்காக ஒதுக்கீடு செய்ய முடியாதா? அப்போ உங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லையா? மழை வரும் என்று தெரியாதா?
வெள்ளம் வரும் என்று தெரியாதா? வறட்சி வரும் என்று தெரியாதா? அப்போ உங்கள் பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதா? மத்திய அரசு நிதி கொடுத்து தான் ஆக வேண்டும், அதை நான் இல்லை என்று சொல்லவில்லை, மாநில அரசுக்கு உங்களுக்கென்று ஒரு கடமை இல்லையா? என்பது தான் என் கேள்வி. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, இதனை தவிர்க்க முடியாது, இது திட்டமிடுதல். அடுத்த ஆண்டு வெள்ளம் வரும், அடுத்த ஆண்டு வறட்சி வரும், விவசாயிகளுக்கு செய்ய வேண்டும் என்று உங்களுடைய பட்ஜெட்டில் நிதி ஒதுக்குங்கள்.” என்றார்.












Click it and Unblock the Notifications