"நான் வெளிநாடு போன 3 மாசத்துல.." விஜய், உதயநிதி ஸ்டாலின் பற்றி அண்ணாமலை சொன்ன பஞ்ச்!
கோவை: கடந்த மூன்று மாதங்களில் சக்சஸ்ஃபுல்லான நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஃபெயில்டு நடிகர் துணை முதல்வராகிவிட்டார். இவர்களுடைய வருகையால் சாதாரண மனிதருக்கு எந்தவொரு பயனும் இல்லை. சாதாரண மக்களுக்கு புரட்சிகரமான அரசியலை இவர்கள் கொண்டு வந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்புக்காக கடந்த மூன்று மாதங்கள் லண்டன் சென்றிருந்தார். படிப்பு முடிந்து அவர் இன்று தமிழ்நாடு திரும்பியுள்ளார். சென்னை வந்த அண்ணாமலை விஜய் அரசியல் என்ட்ரி தொடங்கி புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "மூன்று மாதம் வெளியில் சென்று படிப்பதற்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது. கட்சியும் பெரிய மனது வைத்து அனுமதி வழங்கினர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் கீழ் தான் இந்த மூன்று மாதம் படித்தேன். என் அரசியலை இன்னும் மேம்படுத்துவதற்கு இது உதவியது. இந்த மூன்று மாத காலத்தில் நிறைய அரசியல் மாற்றம் நடந்துள்ளது.
நடிகர் விஜய் தன் உச்சத்தை விட்டு அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் வருகையை நான் வரவேற்கிறேன். விஜய் திராவி கட்சிகள் பேசும் சித்தாந்தத்தை தான் பேசுகிறார். புதிதாக எதுவும் இல்லை. விஜய்யின் கொள்கை கிட்டத்தட்ட திராவிட கட்சிகளின் கொள்கைகளை ஒத்துப்போகிறது. இதனால் யாருக்கு பாதிப்பு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
விஜய்யை கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் கேள்வி கேட்போம். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். திமுக எப்போதும் ஒரு குடும்பத்தைச் சார்ந்துள்ளது. புதிய சிந்தனைகளுக்கு அங்கு இடமில்லை. உதயநிதி நன்றாக செயல்பட்டால் பாராட்டுவோம். தவறாக செயல்பட்டால் விமர்சிப்போம் என்றார்.
அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது: கடந்த மூன்று மாதங்களில் சக்சஸ்ஃபுல்லான நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார். ஃபெயில்டு நடிகர் துணை முதல்வராகிவிட்டார். கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கேட்ட முதல் கேள்வியும் அவர்களுடைய அரசியலை எப்படி பார்க்கிறீர்கள் என்றுதான். இவர்களுடைய வருகையால் சாதாரண மனிதருக்கு எந்தவொரு பயனும் இல்லை. சாதாரண மக்களுக்கு புரட்சிகரமான அரசியலை இவர்கள் கொண்டு வந்திருக்கிறார்களா என்றால் இல்லை.
நடிகர் விஜயின் அரசியலை நான் வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர், நிறைய மக்களின் அன்பைப் பெற்றுள்ள நடிகர். நிறைய பேர் அவருடைய படங்களை ரசிக்கின்றனர். ஆனால், அரசியல் பரிமாணம் என்பது வேறு. அரசியல் என்பது முழுமையான வேறு களம். ஆனால் அவர் வர வேண்டும். அரசியல் களமாடட்டும் பார்ப்போம்.
அதேநேரத்தில், உதயநிதியின் அரசியலை வேறு விதமாகப் பார்க்கிறேன். அதனை மக்கள் பார்க்கிறார்கள். யாரை துணை முதல்வராக்க வேண்டும் என்பது அவர்களுடைய கட்சியின் உரிமை. இந்தக் கூட்டத்தில் அரசியல் பற்றி முழுமையாகப் பேசினால் தப்பாக போய்விடும். இன்று மக்களுக்கு பயன்படக்கூடிய அரசியலை நாம் பேசுவது இல்லை.
ஒரு ஸ்டெர்லைட் மூடியதால் காப்பர் ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாடு, இப்போது இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. ஒரு ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மேலைநாட்டில் இருந்து காப்பரை வாங்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அப்போது, ஜியோ பாலிடிக்ஸில் இந்தியாவிற்கு சர்வதேச அரசியலில் என்ன பிரச்னை ஏற்படும் என்பதை சாதாரண மனிதர்கள் புரிந்து கொண்டால். இதனை வைத்து அரசியலே செய்ய முடியாது.
சாலை போட்டால் எதிர்ப்பு என ஒவ்வொரு விஷயத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. அதில் சில பிரச்னைகளும் இருக்கிறது ஒப்புக் கொள்கிறேன். அதே நேரத்தில் கண்டிப்பாக அதில் நல்ல விஷயங்களும் உள்ளது. இதைப் பக்குவமாக எடுத்துச் செல்லக்கூடிய அரசியல்வாதிகள் இல்லை. நல்லதும் உள்ளது கெட்டதும் உள்ளது. கிராமத்தில் கமிட்டி போட்டு எடுத்து சொல்ல வேண்டும்.
சுகாதாரம், சுற்றுச்சூழல் பிரச்னைகள் கையாளுவது, வேலைவாய்ப்பு போன்றவற்றை சொல்ல வேண்டும். மிடில் கிளாஸ் மக்கள் குரலை உயர்த்தி கேள்வி எழுப்ப வேண்டும். இல்லையென்றால் எதற்கெடுத்தாலும் எதிர்ப்புதான் வரும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications