தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? இந்தியில் அண்ணாமலை கொடுத்த பதில்!
கோவை: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இன்னும் 3 வாரங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முழுமையாக பலம் தெரியும் என்று கூறிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக தரப்பில் 63 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. ஜனவரி 2வது வாரத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

அதேபோல் ஜனவரி கடைசி வாரத்திற்குள் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்த முறை பாஜகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபோது, பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், டிசம்பர் கடைசி வாரத்தில் இருக்கிறோம். இன்னும் 3 வாரங்கள் முழுமையாக இருக்கிறது. இதனால் என்டிஏ கூட்டணி எப்படி இருக்கு? அதன் வலிமை எப்படி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். என்டிஏ ஊட்டணி வலிமையாக தேர்தல் களத்தில் நின்று, பெரிய வெற்றியை பெறுவதற்கு சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன.
அதேபோல் தமிழ்நாட்டில் பாஜக பூத் கமிட்டி வலிமையாக உள்ளது. மொத்தமாக 63 ஆயிரம் பூத் கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய இணையதளத்தில் 5 ஆயிரம் குறைவாக காட்டி இருக்கிறது. எங்களை பொறுத்தவரை என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். டிடிவி தினகரன், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் கூட்டம் ஜனவரியில் நடக்கவுள்ளது.
ஓபிஎஸ் தரப்பிலும் கூட்டம் நடத்தப்பட்டு கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதனால் யாரும் அவசரப்பட்டு எந்த வார்த்தையையும் பேச வேண்டிய தேவை இல்லை. நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன். எல்லா தலைவர்களும், எல்லா கட்சிகளும் மரியாதையாக நடத்தப்பட்டு, என்டிஏ கூட்டணி ஆட்சியில் அமரும் என்றார். தொடர்ந்து, இந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, டெல்லி ரொம்ப தூரத்தில் உள்ளது என்று பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications