கோவை அன்னூரில் சாலை விரிவாக்கத்துக்காக 786 ஏக்கர் நிலம்.. காலாவதியான முடிவு.. விவசாயிகள் மகிழ்சசி
கோவை: கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. எனவே இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச்சாலை விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டது. இதற்காக கோவை அன்னூர் பகுதிகளில் சாலை 786 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு தற்போது காலாவதியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை-சத்தி தேசிய நெடுஞ்சாலையில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், புறவழிச்சாலை விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. பலகட்ட மாற்றங்கள் நடந்தது. இத்திட்டத்திற்கான இறுதி விரிவான அறிக்கை 2022-ம் ஆண்டின் இறுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

விரிவான இந்த சாலை திட்டத்தின் முன்மொழியப்பட்ட வழித்தடம், கோவை சரவணம்பட்டிக்கு அருகிலுள்ள குரும்பபாளையத்தில் தொடங்கி, கோவில்பாளையம், அன்னூர், புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் வழியாக சென்று கர்நாடக எல்லையை அடையுமாறு வடிவமைத்திருந்தார்கள்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 30 வருவாய் கிராமங்களில் 786 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழக அரசு முன்மொழிந்தது. இதில் கோவை மாவட்டத்தில் 12 கிராமங்களும், திருப்பூர் மாவட்டத்தில் 2 கிராமங்களும், ஈரோடு மாவட்டத்தில் 16 கிராமங்களும் அடங்கும். இதற்காக ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அடையாளம் காணப்பட்ட இந்த நிலங்களின் மீது அதிகாரிகள் முடக்கத்துக்கான உத்தரவை விதித்தார்கள். இதனால் நில உரிமையாளர்கள் தங்கள் சொத்துக்களை விற்பனை செய்யவோ, வாங்கவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாத நிலை ஏற்பட்டது. அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், புளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு, இந்தக் கட்டுப்பாடுகளை கண்டிப்பாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.
விவசாயிகளுக்கு, இந்த நில முடக்கம் நீண்டகாலத் துயரத்தை ஏற்படுத்தியது. தங்கள் நிலச்சொத்துக்களைப் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்ததால் கல்வி, மருத்துவச் செலவுகள் அல்லது குடும்ப விழாக்கள் போன்ற தேவைகளுக்காகப் பல விவசாயிகள் கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
பிப்ரவரி 2025-ல் வெளியிடப்பட்ட 3g பிரிவு நிலம் கையகப்படுத்துதல் அறிவிப்பானது, ஓராண்டு கால அவகாசம் முடிந்த பிறகு காலாவதியாகிவிட்டதாகவும், அது பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்றும் 'தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்' தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த முந்தைய கட்டுப்பாடுகள் தற்போது அதிகாரிகளால் விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கிறது,
இதனால் அன்னூர் பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இந்த உத்தரவு காலாவதியானது எங்களுக்கு மிகவும் நிம்மதியாக இருக்கிறது, பல ஆண்டுகளாக நிச்சயமற்ற நிலை நீடித்தது. இதனால் எங்களால் நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது பயன்படுத்திக்கொள்ளவோ முடியாத நிலை இருந்தது. ஆனால் இனிமேல் நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ அல்லது பயன்படுத்திக்கொள்ளவோ என்று மகிழ்ச்சியுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications