'அதிமுக குறைகளை சொல்வது மட்டும் திமுகவின் வேலையில்லை.. மக்கள்நலன் திட்டங்கள் தேவை..' வானதி சீனிவாசன்
கோவை: அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடங்களின் தரம் குறித்து புகார் வந்தால் திமுக அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிவித்துள்ள பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஆனால் அதிமுக ஆட்சியின் குறைகளைக் கண்டறிவதை மட்டுமே வைத்துக்கொள்ளாமல் ஆக்கப்பூர்வமான திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கோவையில் மக்கள் சேவை மையம் சார்பில் மோடி மகள் திட்டமும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கோவை தெற்கு சட்டசபை உறுப்பினரும் பாஜக மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.
காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும், பெற்றோரை இழந்த குடும்பத்தினருக்கும் தையல் மிஷின்கள் வழங்கப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை தெற்கு சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டில் 10 வயதுக்கு மேல் உள்ள சிறார்களுக்கு மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது, 10 வயதுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. 10 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கும் அடையாள அட்டையை வழங்கினால் அது அரசின் உதவிகள் பெற வசதியாக இருக்கும். இந்த ஆண்டு பட்ஜெட்டில் மாற்றுத் திறனாளிகள் உடன் இன்னொருவர் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நகரப் பேருந்துகளில் மட்டும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதைத் தொலைதூர பேருந்துகளுக்கும் நீடிக்க வேண்டும்.

குறைகளை மட்டும் கண்டறியக் கூடாது
அதிமுக ஆட்சியின்போது கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்ற இருப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழ்நாடு அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கலாம் ஆனால், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட அனைத்து காரியம் குறித்தும் விசாரணை நடத்துவோம் என்பது சரிப்பட்டு வராது. அதிமுக திட்டங்களில் உள்ள குறைகளைக் கண்டறிவதற்குப் பதிலாக மக்கள் நலத்திட்டங்களில் திமுக கவனம் செலுத்த வேண்டும். மக்கள் திமுகவுக்கு அளித்துள்ள ஐந்து ஆண்டுகளைக் குறை சொல்வதிலேயே செலவழிக்காமல் ஆக்கப்பூர்வமான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

முதல் 100 நாட்கள்
திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்கள் முடிந்துள்ளது. இந்த முதல் 100 நாட்கள்தான் ஆரம்ப காலகட்டம். இன்னும் 4.5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருக்கும் என்பதால் வரும் காலங்களில் திமுகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். முதல் 100 நாட்களில் திமுக சொல்லிக் கொள்ளும்படி எதையும் பொரியாகச் செய்து கொட்டவில்லை. தற்போது இக்கட்டான கொரோனா காலம் நிலவுவது உண்மைதான். கொரோனா பாதிப்பால் சவாலான ஒரு சூழலில் தான் இந்த ஆட்சியாளர்கள் பணிபுரிகின்றனர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்கிகரார்கள். அதை நிறைவேற்ற இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசுத் திட்டங்கள்
வரி வருவாய் மூலம் தமிழக அரசுக்குக் கிடைக்கும் நிதியை விட மத்திய பாஜக அரசின் நேரடி திட்டங்கள், மானியங்கள் ஆகியவை மூலம் மாநில அரசுக்கு 3 மடங்கு அதிகமாகத் திட்ட நிதி வருவதை நிதியமைச்சரே ஒப்புக் கொள்கின்றார். ஆனால், அதை மத்திய அரசு ஏன் நேரடியாகச் செய்கிறது, மாநில அரசுகள் மூலமே இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு மக்களுக்காக தானே இந்த திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பி.டி. ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு மத்திய அரசைப் பாராட்ட மனம் இல்லை. அதனால்தான் இப்படிப் பேசி வருகிறார். எந்தெந்த திட்டங்களுக்காக மத்திய அரசு, மாநில அரசின் வாயிலாக நிதிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று அமைச்சர் விளக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications