"அவருக்கு தகுதி இல்லை!" முற்றும் மோதல்.. கீதா ஜீவன் குறித்து கேட்டதும்.. பாஜக சுதாகர் ரெட்டி பரபர
கோவை: இன்று மாலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ளும் கூட்டம் கோவையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஆய்வு செய்த பாஜக மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, திமுக அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று மாலை நடைபெறும் பாஜக ஓட்டுச் சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் பொதுக் கூட்டத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்க உள்ளார்.
கோவை மற்றும் நீலகிரி ஆகிய இரு மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையம் நால் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஆலோசனைக் கூட்டம்
இதில் இரு மக்களவை தொகுதிகளில் உள்ள 12 சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி முகவர்கள் 9000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று வரும் நாடாளுமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும், மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் எப்படி எடுத்துக் கூற வேண்டும் உள்ளிட்டவை குறித்து முகவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். மேலும், இதில் பாஜகவின் பிரசாரம் எப்படி அமைய வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளது.

ஜே பி நட்டா
மேட்டுப்பாளையம் வரும் ஜே.பி.நட்டாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி முகவர்கள் கூட்டம் முடிந்தவுடன் அதே பகுதியில் ஜே.பி.நட்டா பங்கேற்கும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இதனையடுத்து கூட்டம் நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்கூட்ட மேடை மற்றும் அரங்குகள் அமைக்கும் முன்னேற்பாட்டுப் பணிகள் நடந்தன. பூமி பூஜை நடத்தப்பட்டு 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கூட்டம் நடைபெறும் இடம் முழுவீச்சில் சுத்தப்படுத்தப்பட்டுத் தயார்படுத்தப்பட்டது.

ஆய்வு
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரான சி.பி.ராதாகிருஷ்ணன் முன்னின்று செய்தார்.. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தென்திருப்பதி நால்ரோட்டில் தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்ளவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகளை பாஜக மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தகுதியற்றவர்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் கீதா ஜீவன் மலிவான அரசியல் செய்து வருவதாகவும் அவர் அரசியலுக்குத் தகுதியற்றவர் எனவும் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், "திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.. பொள்ளாச்சியில் நகராட்சியின் இளம்பெண் கவுன்சிலர் ஊழல் இல்லாமல் மக்களுக்கு நல்லது செய்ய இயலவில்லை என கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்தளவிற்குத் தமிழகத்தில் ஊழல் மலிந்துள்ளது.

குண்டர் மாடல் ஆட்சி
தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியில்லை. குண்டர்கள் மாடல் ஆட்சி.. கடந்த ஆட்சியில் பொங்கலுக்குக் கரும்பு கொடுத்தனர். திமுக ஆட்சியில் கரும்பு கொடுக்காமல் கரும்பு பயிரிட்ட விவசாயிகளை ஏமாற்றியுள்ளது திமுக அரசு" என்று அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாநில விவசாய அணித் தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கீதா ஜீவன்
திமுக அமைச்சர் கீதா ஜீவனுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.. சில வாரங்களுக்கு முன்பு, தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கீதா ஜீவனை கடுமையாக விமர்சித்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய கீதா ஜீவன், "ஒவ்வொரு அமைச்சர் குறித்தும் பேசுவதை நிறுத்திக் கொள். இல்லையேல் நீ பேசிக் கொண்டிருக்கும் போதே அதே மேடையில் ஏற வேண்டியிருக்கும்" என்று பேசியிருந்தார். இதற்கு பாஜகவின் சசிகலா புஷ்பா, "நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும் போது கால் இருக்காது, நாக்கு இருக்காது" என்று மிரட்டல் விடுத்திருந்தார். இது தொடர்பாக சசிகலா புஷ்பா மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications