கோவையை உலுக்கிய கொலை.. கிணற்றில் தேட கிளம்பிய பூதம்! இன்ஸ்பெக்டருக்கு வேலை போச்சு! சிக்கிய 4 பேர்!
கோவை: கோவை செட்டிபாளையம் அருகே நண்பனை கொன்று கிணற்றில் வீசியதாக இருவர் சரணடைந்த வழக்கில், புதிய திருப்பமாக சென்னையில் டிரைவரை கொன்று கோவைக்கு காரில் பிணத்தைக் கொண்டு வந்து கிணற்றில் வீசிய தகவல் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஆட்டோ டிரைவர் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட வழக்கை சரியாக விசாரிக்காத சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன், பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகப்பெருமாள் ஆகிய இரண்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரண் அடைந்தனர்.
அப்போது அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் நெல்லையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் உடன் சேர்ந்து மது குடித்ததாகவும் அதில் ஏற்பட்ட தகராறில் அவரை கொன்று உடலை கல்லை கட்டி கோவை செட்டிபாளையம் அடுத்த மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள கிணற்றில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போட்டதாகவும் தெரிவித்தனர்.

நண்பர் கொலை
இதைத் தொடர்ந்து உடலை வீசிய கிணற்று பகுதியில் இரண்டு பேரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் கிணற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்குப் பின் ஜெயராமனின் உடல் மீட்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆனதால் உடல் எலும்புக் கூடாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் ஜெயராமனின் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. காவல் துறையினரிடம் சரணடைந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.
நண்பர் கொலை
பின்னர் அவர்களிடம் காவல்துறையினர் வேறு பாணியில் நடத்திய விசாரணையில் ஜெயராமன் சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலை செய்யப்பட்டதாகவும் கொலையான ஜெயராமன் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்ததுடன் ஆட்டோ டிரைவராகவும் இருந்ததாகவும் தெரிவித்தனர். அப்போது சக ஓட்டுநர்களுடன் ஜெயராமனுக்கு பழக்கம் ஏற்பட்டு இரவு நேரங்களில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதை வாடிக்கையாக கொண்டு இருந்ததாகவும் ஜெயராமன் சொந்தமாக ஆட்டோ வாங்க அவரது நண்பர்கள் தனியார் நிறுவனம் மூலம் வாகன கடன் உதவி பெற்று தந்த நிலையில், கடனை ஜெயராமன் சரியாக செலுத்தவில்லை என்றும், இதனால் ஜாமீன் அளித்தவர்களை நிதி நிறுவன அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணத்தை செலுத்த கூறியுள்ளனர்.
காவல் துறை
இதனால் ஜெயராமனுக்கு ஜாமீன் கொடுத்த நண்பர்கள் 4 பேர் சேர்ந்து ஜெயராமனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மறைவான பகுதிக்கு அழைத்துச் சென்று பணத்தைக் கேட்கவே, தொடர்ந்து பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் தடியால் தலையில் சரமாரியாக தாக்கியாக கூறினர். அதில் மயக்கம் அடைந்த ஜெயராமனுக்கு வலிப்பு நோயும் இருந்ததால் ஜெயராமன் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்ததால் காவல் துறையினர் தங்களை கொலை வழக்கில் கைது செய்து விடுவார்கள் என்று கருதி காரில் உடலைக் கொண்டு வந்து கோவையில் கிணற்றில் வீசி உள்ளனர்.
இரண்டு பேர் சரண்
இந்த நிலையில் இந்த கொலையில் இரண்டு பேர் சரண் அடைந்தாலும், சென்னையில் வசித்து வரும் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நியூட்டன், பெனிட்டோ ஆகியோர் தான் முக்கிய காரணம் என்று காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னை சென்று இந்த இரண்டு பேரையும் கைது செய்து கோவை கொண்டு வந்துள்ளனர். நியூட்டனும் பெனிட்டோவும் பண விவகாரத்தில் ஜெயராமனை தங்களது கூட்டாளிகள் உதவியுடன் தீர்த்துக் கட்டியதும் விசாரணையில் அம்பலமானது.
4 பேர் கைது
தொடர்ந்து இந்த கொலை வழக்கில் நியூட்டன், பெனிட்டோ மற்றும் ஏற்கனவே சரணடைந்த பாலமுருகன், முருகப்பெருமாள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் கொலை செய்து சடலத்தை கோவையில் கிணற்றில் வீசிய நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் கைதாகி உள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆய்வாளர் பணியிடை நீக்கம்
இந்த நிலையில் கொலை வழக்கில் ஆஜரானவர்களின் வாக்குமூலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வழக்கை கையாண்டதோடு, தீர விசாரிக்காமல் இரண்டு குற்றவாளிகள் தப்பா இருந்த நிலையில், கொலை வழக்கை முறையாக விசாரிக்காத சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications