முதல்வரால் ஒரு Airshowவை ஒழுங்காக நடத்த முடியலை.. மணிப்பூர் அரசியல் பத்தி பேசுகிறார்.. அண்ணாமலை!
கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சென்னையின் மையப் பகுதியில் ஒரு விமான சாகச நிகழ்ச்சியை ஒழுங்காக திட்டமிட்டு நடத்த முடியவில்லை. ஆனால் மணிப்பூர் அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை உங்களில் ஒருவன் என்ற வீடியோ மூலம் கருத்து தெரிவித்துள்ளார். அதில், மிகவும் காலதாமதமான முடிவு இது. அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் தாமாக முன்வந்து பதவி விலகவில்லை. வேறு வழியின்றி பதவி விலகி இருக்கிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூர் பற்றி எரிந்தது. 220க்கும் அதிகமான மக்கள் பலியாகி இருக்கிறார்கள். மாநிலத்தின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காமல் மத்திய பாஜக அரசு பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்கள். தற்போது வன்முறையின் பின்னணியில் மாநில முதலமைச்சரே சம்பந்தப்பட்டு இருக்கிறார் என்று அவர் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து விசாரிக்க உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது.
இதனால் கூட்டணி கட்சியினரும், பாஜக எம்எல்ஏ-க்களும் கூட அவருக்கு எதிராக திரும்பிவிட்டார்கள். தற்போது வேறி வழியில்லாமல் அவரை ராஜினாமா செய்ய வைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளார்கள். பாஜக ஆட்சி நடக்கும் மணிப்பூராக இருந்தாலும், உ.பி.-யாக இருந்தாலும் சட்டம் ஒழுங்கு நிலைமை இப்படிதான் இருக்கிறது.
இந்த லட்சணத்தில் இவர்கள் அடுத்த மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். நம்மை பொறுத்தவரை மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும். மக்கள் விரும்பும் மக்களாட்சி அமைய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஒரு AirShowவை ஒழுக்கமாக நடத்த தெரியவில்லை. அதனால் அத்தனை மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இவர் மணிப்பூர் மாநில அரசியல் பற்றி பேசி கொண்டிருக்கிறார். சென்னையின் மைய பகுதியில் ஏர் ஷோ நடத்த தெரியவில்லை.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பெங்களூருக்கு அனுப்பி ஏர் ஷோ எப்படி நடத்தப்படுகிறது என்பதை பாருங்கள். தினமும் ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடக்கிறது. அது விமான நிலையத்தை ஒட்டி மத்திய அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை முதலமைச்சருக்கு என்ன சொன்னாலும் புரியாது.
மீண்டும் சொல்கிறேன்.. அங்கு பாஜக செய்த தவறு என்ன.. நீதிமன்றம் ஒரு சமூகத்தினருக்கு எஸ்சி அந்தஸ்து கொடுக்கிறார்கள். இரு சமூகத்திற்கும் இடையில் பிரச்சனை. கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டுள்ளது. மணிப்பூர், உத்தரப் பிரதேச மாநிலப் பிரச்சனைகளை பற்றி பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சொந்த மண்ணில் நடக்கும் பிரச்சனைகளை பேச மறுக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications