கோவையில் வாங்கிய கடன்.. பல்லடம் வீட்டுக்கு நடையாய் நடந்த வங்கி.. திருப்பூரையே திகைக்க வைத்த தம்பதி
கோவை: பல்லடம் தம்பதியினர் திடுதிப்பென்று எடுத்த இந்த துயரமான முடிவு, அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.. இது தொடர்பான விசாரணயை திருப்பூர் போலீசார் நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது வெங்கிட்டாபுரம் மீனாட்சிபுரம்... இங்கு வசித்து வரும் தம்பதி சிவக்குமார் - ராஜேஸ்வரி.. சிவக்குமாருக்கு 50 வயதாகிறது.. ராஜேஸ்வரிக்கு 46 வயதாகிறது. இவர்களுக்கு 25 வயதில் சந்துரு என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

சிவக்குமார் அருள்புரத்தில் நூல் பின்னும் நிறுவனம் ஒன்றை சொந்தமாக வைத்து நடத்தி வந்துள்ளார்... இதே நிறுவனத்துக்கு ராஜேஸ்வரியும் சென்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்றைய தினம் தம்பதி இருவருமே வேலைக்கு போகாமல், வீட்டிலேயே இருந்திருக்கிறார்கள்.. மகன் சந்துரு மட்டும் வேலைக்கு கிளம்பி சென்றிருக்கிறார்..
நம்பவேயில்லை: பிறகு சிவக்குமார், மகன் சந்துருவுக்கு போன் செய்து, ராஜேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தந்துள்ளார்.. ஆனால், இதை சந்துரு நம்பவே இல்லையாம். சிவக்குமார் பல முறை சொல்லியும் நம்பாததால், ராஜேஸ்வரி தூக்கில் தொங்குவதை போட்டோ எடுத்து, அதை வாட்ஸ் அப்பில் மகனுக்கு அனுப்பி வைத்தார் சிவக்குமார்.
போட்டோவை பார்த்ததும் பதறிப்போன சந்துரு, வீட்டிற்கு உடனடியாக கிளம்பி வந்துள்ளார்.. அப்போதுதான், ராஜேஸ்வரி சடலத்துக்கு அருகில், சிவக்குமாரும் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அலறினார்..
போஸ்ட் மார்ட்டம்: இதையடுத்து, சந்துரு அளித்த தகவலின் அடிப்படையில், பல்லடம் போலீசார் விரைந்து வீட்டுக்கு வந்தனர்.. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்த 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான விசாரணையையும் ஆரம்பித்தனர்.
அப்போதுதான் கடன் பிரச்சனையில் இப்படியொரு துயரம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, சிவக்குமார், புதிய வீடு கட்டுவதற்காக கோவையில் உள்ள தனியார் வங்கியில் கடன் வாங்கியிருந்தாராம்.. கடந்த ஒரு வாரமாக கடனை வசூலிப்பதற்காக தனியார் வங்கி ஊழியர்கள் தொடர்ச்சியாக அவரது வீட்டிற்கு வந்து போனதாக கூறப்படுகிறது..
மன உளைச்சல்: இந்த மன உளைச்சல் காரணமாக தம்பதி இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. எனினும், சந்துரு அளித்த புகார் அடிப்படையில் பல்லடம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications