கோவை ஐடி ஊழியர்கள் டிஸ்மிஸ்! காஞ்சிபுரம் சாம்சங் தொழிலாளர்களை பாருங்க.. சிஐடியு அட்வைஸ்
கோயம்புத்தூர்: ஒரே இரவில் சுமார் 2000 ஐடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பது கோவையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தொழிற்சங்கத்தின் அவசியம் குறித்து சாம்சங் தொழிலாளர்களை மேற்கோள்காட்டி சிஐடியு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கோவையின் ஆர்.எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அமெரிக்க ஐடி நிறுவனம் Focus Edumatics, நேற்று முன்தினம் இரவு தனது ஊழியர்களுக்கு ஒரு மெயிலை அனுப்பியிருக்கிறது. அதில், "நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. எனவே வேறு வழியின்றி மூடப்படுகிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் சுமார் 2000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இது குறித்து புகார் அளிக்க கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த Focus Edumatics ஊழியர்கள், அங்கு போராட்டத்தையும் நடத்தியிருந்தனர். இந்த போராட்டம் கோவை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஒரு நிறுவனம் எப்படி இயங்குகிறது? அது எப்படி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடியும்? அதற்கான வழிமுறைகள் என்ன? தொழிலாளர்கள் பக்கம் இருக்கும் உரிமைகள் என்னென்ன? என்பது குறித்து சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், ஒன்இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் பேசியதாவது, "ஒரு நிறுவனம் தொடங்கப்படுவது எவ்வளவு முக்கியமோ, அதேபோல அது மூடப்படும்போது ஊழியர்களுக்கு வழங்கும் இழப்பீடும் அவ்வளவு முக்கியமானதாகும். பொதுவாக ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப, நிறுவனங்கள் 3 முக்கியமான காரணங்களை சொல்லுகின்றன.
1.வேலை குறைவாக இருக்கிறது. ஆனால் ஊழியர்கள்/தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்று காரணம் சொல்லி, அவர்களை வெளியே அனுப்பும்.
2.ஊழியர்களை வெளியேற்ற நிறுவனங்கள் சொல்லும் இன்னொரு காரணம், 'தொழில் நஷ்டம்' என்பதுதான். ஆனால் இப்படி செய்வதற்கும் சில வழிமுறைகள் இருக்கின்றன.
3.மூன்றாவது காரணம் வேலையின் தரம். ஒரு ஊழியர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் எனில், அவருடைய வேலை திருப்திகரமாக இல்லை என்று சொல்லி, அவரை வேலையை விட்டு எடுக்க முடியும்.
ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. எனவேதான் தொழிற்சங்கம் வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.
மேற்குறிப்பிட்ட மூன்று வழிகளிலும் ஊழியர்களை வெளியேற்றும்போது, சட்டம் வழங்கியுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
அதாவது, முதல் காரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், ஊழியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என கூறி சிலரை வேலையை விட்டு அனுப்ப நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. எனில், அதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும். அரசு அனுமதி இல்லாமல் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியாது.
ஆனால் இந்த சட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 100 பேரிலிருந்து 300 பேர் என்று திருத்தம் செய்திருக்கிறது. இது மோசமான திருத்தம். இனி 300 பேருக்கும் அதிகமானோர் வேலை செய்யும் நிறுவனத்தில்தான் இந்த சட்டம் அமலாகும்.
2வது காரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நிறுவனத்தின் லாப/நஷ்ட கணக்குகளை அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் சம்பந்தப்பட்ட நிறுவனம் காண்பிக்க வேண்டும். இந்த கண்குகளின்படி, நிறுவனத்தை இதற்கு பிறகு நடத்தவே முடியாத சூழல் இருக்கிறது என்பதை அதன் ஓனர் நிரூபிக்க வேண்டும்.
ஆனால் நிறுவனங்கள் இப்படி கூறுவதற்கான உண்மையான நோக்கம், குறைந்த சம்பளத்தில் வேறு தொழிலாளர்களை வேலைக்கு எடுக்க முயற்சிக்கிறது என்பதுதான். அப்படி இருக்கும்போது தொழிற்சங்கம் இந்த உண்மையை விளக்கி, ஊழியர்களுக்கு ஆதரவாக போராடும். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உரிய இழப்பீட்டை வாங்கி தருவோம்.
ஒருவேளை உண்மையாகவே நிறுவனம் நஷ்டத்தில்தான் இயங்குகிறது என்றால், அதற்கு முன்னர் லாபத்தில் இயங்கியபோது அதற்காக உழைத்த ஊழியர்களுக்கு இழப்பீட்டை தொழிற்சங்கம் பெற்று தரும். தொழிற்சங்கம் இல்லாத நிறுவனங்களில், நிறுவனம் இழப்பீட்டை வழங்கும். ஆனால் அது நியாயமானதாக இருக்காது.
3வதாக, ஒரு ஊழியரின் வேலை தரம் குறித்து நிறுவனம் அதிருப்தி அடைகிறது எனில், அது குறித்து விளக்கமளிக்க ஊழியர் தரப்பில் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதை தொழிற்சங்கம் வலியுறுத்தும். இதைத்தான் தொழிற்சங்கம் செய்கிறது" என்று கூறியுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் தொழிலாளர் சங்கம் அமைத்ததை சுட்டிக்காட்டும் தொழிற்சங்கத்தினர், கோவை ஐடி நிறுவனத்திலும் சங்கம் அமைத்திருந்தால் அவ்வளவு எளிதில் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பியிருக்க முடியாது என்று கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications