தேதியை குறிச்சாச்சு.. மொத்தமாக மாறப்போகும் காந்திபுரம் பேருந்து நிலையம்.. இத்தனை வசதிகளா
கோவை: சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் நாளுக்கு நாள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுடன் வளர்ந்து வருகிறது. கோவையில் உள்ள முக்கியப் பேருந்து நிலையங்களில் காந்திபுரம் பேருந்து நிலையமும் ஒன்று. இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு 31 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், மேற்கூரைகள் சேதமடைந்துள்ளதால் இடிந்து விழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை புதுப்பித்து பல்வேறு வசதிகளை ஏற்படுத்த கோவை மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னேற்றப் பாதையில் கோவை
சென்னைக்கு அடுத்தபடியாக வருவாய் தரும் பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் விளங்கி வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் நிறுவனங்கள் அனைத்து முக்கியத் துறைகளிலும் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கோவை உருவெடுத்துள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து கல்வி, தொழில், வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இங்கு வந்து ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

கோவையில் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதில் பேருந்து போக்குவரத்து சேவை. மெட்ரோ திட்டங்களுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், சாயிபாபா காலனி பேருந்து நிலையம் என 7 பேருந்து நிலைங்கள் உள்ளன. பல்வேறு முக்கிய மாவட்டங்களுக்கு இந்த பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காந்திபுரம் பேருந்து நிலையம்
பொள்ளாச்சி மற்றும் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணி சமீபத்தில் தொடங்கப்பட்டது. காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும், 998 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிட்டத்தட்ட 1.2 லட்சம் பயணிகள் காந்திபுரம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 1974 ஆம் ஆண்டு காந்திபுரம் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், மேற்கூரைகள் பழுதாகி இடிந்து விழுந்து வருகின்றன.
சிரமத்துக்குள்ளாகும் பொதுமக்கள்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைக் காலங்களில் பேருந்து நிலையத்துக்குள் தண்ணீரும் ஒழுகுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல, மழை நீர் வடிந்து செல்வதற்கு வசதியாக சரியான வடிகால் வசதிகளும் இல்லை. பயணிகள் அமருவதற்கான முறையான இருக்கை வசதிகளும் இல்லை.
இந்நிலையில், காந்திபுரம் பேருந்து நிலையம் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்க மாநாகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படவுள்ளது. வெளியூரைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வந்து செல்லும் நிலையில், பயணிகளின் வசதிக்காக உள்ளூர் திட்ட குழும நிலையில் ரூ. 30 கோடி மதிப்பில் புதுப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
வரப்போகும் வசதிகள்
பேருந்துகள் நிற்குமிடம், குளியலறையுடன் கூடிய கழிப்பிட வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம், காத்திருப்பு அறை, கடைகள், பயணிகள் பொருட்கள் பாதுகாப்பு அறை, நேரம் காப்பாளர் அலுவலகம், தகவல் தெரிவிக்கும் அறை, பாலுாட்டும் அறை போன்ற வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
காந்திபுரம் பேருந்து நிலையத்தின் பரப்பளவு மிகவும் குறுகியதாக இருப்பதால் சென்னை ஐஐடி இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி குழுவினர் வரவழைக்கப்பட்டு நிலத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வறிக்கையின்படி நிலத்தின் தன்மை, நில அளவியல், தொழில்நுட்ப வடிவமைப்பு, கட்டட வடிவமைப்பு ஆகியவை இறுதி செய்யப்பட்டுள்ளன.
அனுமதி
இதுகுறித்து, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிராபாகரன் கூறுகையில், காந்திபுரம் பேருந்து நிலையத்தின் திட்ட அறிக்கை தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டதும், டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications