கோவை அருகே துண்டாக கிடந்த கை.. ரயில் தண்டவாளம் அருகே அதிர்ச்சி.. விசாரணையில் உடைந்த மர்மம்
கோவை: கோவை சூலூர் அருகே சினிமா பாணியில், துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு மனித கை கண்டறியப்பட்டது. ஒரு தனியார் நிறுவனத்திற்கு முன்பு கிடந்த அந்த கை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினார்கள். மர்மம் நீடித்த இந்த வழக்கில், தற்போது அந்த கை யாருடையது, என்ன ஆனது, எப்படி அங்கு வந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் பகுதியில் சுதாகர் என்பவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. அந்த ஸ்டோர் அறைக்கு அருகே நேற்று துண்டிக்கப்பட்ட மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. திரைப்பட பாணியில் இருந்த இந்த மர்ம சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துண்டிக்கப்பட்ட கை
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தரப்பில் சூலூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் சூலூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணையை தொடங்கினார்கள். சமீபகாலமாக தமிழ்நாட்டில் கொலை, கொலை முயற்சி சம்பவங்கள் அதிகளவு நடைபெறுகின்றன.
அந்த வரிசையில் இதுவும் கொலை சம்பவமாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. அருகில் வேறு எந்த தடயமும் கிடைக்காததால் சம்பவத்தில் மர்மம் நீடித்தது. அந்த நிறுவனத்தின் அருகே ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இதனால் அங்கு ஏதாவது சம்பவம் நடைபெற்றுள்ளதா என்று சூலூரின் காவல்துறையினர், தனியார் நிறுவனத்தின் மேலாளர் அளித்த புகாரில் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி
காவல்துறையின் தீவிர விசாரணையில் இந்த வழக்கின் மர்மம் விலகியது. காவல்துறை விசாரணை நடத்தியதில் அந்தக் கை திருப்பூர் வளையன்காடு பகுதியைச் சேர்ந்த அழகுபாண்டி (வயது 28) என்று உறுதி செய்யப்பட்டது. அழகுபாண்டிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார்.
சமீபகாலமாக அழகுபாண்டி மற்றும் அவரின் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் வேதனையடைந்த அவர் திருப்பூர் ஆண்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தன்னுடைய கை மற்றும் கால்களை வைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கையை கவ்வி வந்த நாய்
அப்போது அங்கு அதிவேகமாக வந்த ரயில் ஏறியதில் அழகுபாண்டியின் வலது கை மற்றும் இரண்டு கால்கள் துண்டாகி பலத்த காயமடைந்தன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மீட்டு அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
துண்டிக்கப்பட்ட கை மற்றும் சிதைந்த கால்களை, கோவை கள்ளபாளையத்தில் உள்ள உயிரியல் மருத்துவக் கழிவு நிறுவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், அப்போது அங்கிருந்து ஒரு நாய் துண்டிக்கப்பட்ட அழகுபாண்டியின் கையை எடுத்து சென்று தனியார் நிறுவனத்தின் அருகே வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சூலூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications