கோயம்புத்தூர் அருகே பயங்கர தீ.. மளமளவென பரவியதில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்!
கோவை: கோவை மேட்டுப்பாளையம் அருகே சென்னி வீரம்பாளையம் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சென்னி வீரம் பாளையம் திருமா நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் அருகே தரிசு நிலங்கள் அதிகம் உள்ளன. இந்நிலையில், இன்று மதியம் அந்த தரிசு நிலத்தில், காய்ந்த புற்கள் தீப்பற்றி திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இந்த தீ காற்றின் வேகம் காரணமாக, அருகில் உள்ள மக்கள் வசித்த குடிசைகளுக்கு வேகமாகப் பரவியுள்ளது. அருகருகே வீடுகள் இருந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. தீ பற்றியவுடன் வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறிய நிலையில், வீட்டில் இருந்த உடைமைகள், வீட்டு உபயோக பொருட்கள் என அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதமாகின.
மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் வீடுகள் முழுவதும் எரிந்து சேதமாகின. 3 வாகனங்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு உடனடி நிவாரணமாக இலவச வேட்டி சேலைகளை வழங்கினர். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications