“வீல் சேர் இல்ல”.. 84 வயது நோயாளியை இழுத்துச் சென்ற அவலம்! கோவை அரசு மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்
கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 84 வயது முதியவருக்கு வீல் சேர் கொடுக்காததால், மகனே அவரை இழுத்தவாறு சென்று ஆட்டோவில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கோவை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பணியாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வயதான தந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்த அவரது மகன், அங்குள்ள பணியாளர்களிடம் வீல் சேர் கேட்டும் தராததால் அவரை கைத்தாங்கலாக இழுத்துச் செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்தவர் வடிவேல் (84), சர்க்கரை நோயால் ஏற்பட்ட ஆழமான கால் புண்ணிற்காக கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடிவேலை சிகிச்சைக்காக அவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல அங்கு வீல் சேர் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் வீல் சேர் உடனே வேண்டும் என்றால் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் வீல் சேர் ஏதும் வராததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மகன், வடிவேலை தூக்க முடியாமல் கை தாங்கலாக இழுத்துச் சென்று, ஆட்டோவில் ஏற்றி, வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கோவை அரசு மருத்துவமனையில் வயதான நோயாளிக்கு வீல் சேர் வழங்காததால் தந்தையை மகன் இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி விசாரணை நடத்தினார். இதையடுத்து, நோயாளி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் ஒப்பந்த நிறுவன சூப்பர்வைசர்கள் எஸ்தர் ராணி மற்றும் மணிவாசகம் ஆகிய இருவரையும் ஐந்து நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி கூறுகையில், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாக யாரும் இதுவரை புகார் வரவில்லை. புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம். லஞ்சம் கேட்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications