பேசிட்டேயிருந்த கோவை மாணவியை.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்! அரசிடம் கடும் ஆக்ஷன் கேட்கும் காங்கிரஸ்
கோவை: கோவையில் நடந்த பாலியல் சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை தந்து வருகிறது.. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.. இந்நிலையில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை தரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கூட்டணியிலுள்ள தமிழக காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
கோவை ஏர்போர்ட் அருகே தன்னுடைய நண்பருடன் மாணவி ஒருவர் நேற்றைய தினம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் அங்கே வந்த 3 பேர், காரில் உட்கார்ந்திருந்த மாணவியின் ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கூட்டுப் பாலியல் வன்முறை
பிறகு, அதே பகுதியில் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நேரத்திற்குப் பிறகு, மயக்கம் தெளிந்த ஆண் நண்பர் தன்னுடைய செல்போன் மூலமாக பீளமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் முற்புதர் பகுதியில் அரைகுறை ஆடையுடன் கிடந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவையில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. எதிர்க்கட்சிகள் இந்த கொடூர சம்பவத்தை கையிலெடுத்து, தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து கேள்விகளை காட்டமாக எழுப்பி வருகிறார்கள்.
பெண்கள் பாதுகாப்பு
அதிலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இந்த வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்கள் பொதுவெளியில் சுதந்திரமாக நடமாட முடியாத அளவிற்கு, பாதுகாப்பில்லாத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்று தவெக ஆதவ் அர்ஜுனாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், திமுக கூட்டணியிலுள்ள தமிழக காங்கிரஸ் கட்சியும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
செல்வப்பெருந்தகை
கோவையில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பாலியல் குற்றங்களை தடுப்பதில் தமிழ்நாடு அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க முனைந்தாலும் இத்தகைய கொடுமை நடைபெற்று வருகிறது.
பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை கைது செய்ய 7 தனிப்படைகளை காவல்துறை அமைத்திருக்கிறது. இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கோர நிகழ்வுகள் இனியும் நடைபெறாமல் இருக்க இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
முழு மருத்துவ சிகிச்சை செலவு
இத்தகைய குற்றங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க இளைஞர்களிடையே காவல்துறையினர் அச்ச உணர்வை ஏற்படுத்துவதோடு, மகளிருக்கு உரிய பாதுகாப்புகளை வழங்க வேண்டும்.
இனி எவரும் சுலபமாக இத்தகைய வன்கொடுமைகளுக்கு ஆளாகாத வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு முதல்வர், காவல்துறையினருக்கு உரிய ஆணைகளை வழங்க கேட்டுக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications