கோவை சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிபாரிசுக்கு பெண் காவலர்.. போக்சோவில் சிக்கிய பாஜக நிர்வாகி
கோவை: கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் அடுத்த அதிர்ச்சி நடந்துள்ளது. 16 வயது சிறுமி ஒருவரை வில்வித்தை பயிற்சியாளரும், பாஜக நிர்வாகியும் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. பாஜக நிர்வாகியை காவல்துறை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை வடவள்ளி மகாராணி அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 35). இவர் வடவள்ளி பகுதியில் வில்வித்தை பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். அங்கு கோவை முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவி மாணவிகள் பயிற்சி பெற்று வருகிறார்கள். மேலும் கிஷோர் பாஜக கட்சியிலும் அங்கம் வகித்து வருகிறார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை
இவரது பயிற்சி பள்ளியில் 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 2019 ஆம் வருடம் முதல் 2022 வருடம் வரை பயிற்சி பெற்றுள்ளார். அப்போது கடந்த 2022 ஆம் வருடம் கிஷோர் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இருந்தபோதும் பயம் காரணமாக அந்த விஷயத்தை அவர் வெளியில் சொல்லவில்லை. யாரிடமும் சொல்லக் கூடாது என்று கிஷோர் மிரட்டவும் செய்துள்ளார்.
தற்போது அந்த மாணவி மாநில அளவிலான வில் வித்தை சாம்பியன் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக சென்னையில் பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார். தன்னுடைய விளையாட்டிற்கு ஏதாவது வகையில் தொந்தரவு ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் அவர் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். தற்போது அதை தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
வில்வித்தை பயிற்சியாளர் கைது
கடந்த 2022 ஆம் வருடம் பயிற்சி பெறும்போது, கிஷோர் சிறுமியை பல இடங்களில் அநாகரீமாக தொட்டு அத்துமீறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி என்ன செய்வெதன்று தெரியாமல் தவித்துள்ளார். இதனால் தன் கனவு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, வேறு காரணங்களை சொல்லி வில்வித்தைக்கான பயிற்சி பள்ளியை அப்போதே மாற்றியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் சார்பில் ஆர்எஸ்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் கிஷோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து காவல்துறையினர், நேற்று இரவு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக கிஷோர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளிக்கப்பட்டது.
காவலர் மீதும் புகார்
நடவடிக்கையில் தாதம் ஏற்பட்டு வந்த நிலையில், சிறுமியின் வீட்டிற்கு ஒரு பெண் காவலர் சென்று புகார் வாபஸ் பெற்று கொள்ளுங்கள் என்று மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கள் வீட்டிற்கு வந்த பெண் காவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications