கோவை மாணவி தற்கொலை விவகாரம்: மாணவியின் படம், அடையாளங்களை பகிர்ந்தால் வழக்கு: காவல்துறை எச்சரிக்கை
கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் போக்சோ வழக்குகள், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தைகளை அடையாளப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்கிற அடிப்படையில் கோவை மாணவியின் அடையாளத்தை பதிவிட்ட ஊடகங்கள், தொலைக்காட்சிகள், யூடியூப் சானல்கள், சமூக வலைதளங்கள் அவர்கள் அதை அழிக்கவும், இனி பதிவு செய்யாமல் இருக்கவும் போலீஸார் எச்சரித்துள்ளனர். மீறி நடந்தால் வழக்கு பாயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல்
பள்ளி ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் தாளாமல் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் கோவை தனியார் பள்ளி மாணவி ஆசிரியர் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்துக்கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

தற்கொலை, கைது நடவடிக்கை
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஆசிரியர் மற்றும் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்த புகாரைப்பெற்ற தலைமை ஆசிரியை இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புகைப்படம் அடையாளங்கள் வெளியிடும் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் மீது நடவடிக்கை
இந்த விவகாரத்தில் மாணவிக்கு நீதி கேட்டு நடந்த போராட்டமானாலும், அதுகுறித்த விவாதங்கள், செய்திகள், காணொளிகள், சமூக வலைதள பகிர்வுகளில் மாணவியின் அடையாளத்தை பதிவு செய்யும் விதமாக அவரது பெயர், முகவரி, படித்த பள்ளியின் பெயர், பெற்றோர் பெயர் என பல விஷயங்களை பதிவு செய்திருந்தனர். இது குறித்து குழந்தைகள் நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
இதுசம்பந்தமாக நீதிமன்றம் காவல்துறையை கடுமையாக கடிந்துக்கொண்டது. நடவடிக்கை காவல்துறை எடுக்குமா? அல்லது நாங்கள் எடுக்கச் சொல்லி உத்தரவு போடவா? மாணவியின் பெயர், புகைப்பட அடையாளம் அனைத்தையும் யூடியூப், தொலைக்காட்சி, செய்தித்தாள்களில் போடுகின்றனர் என்ன நடைமுறை இது எனக்கண்டித்தவுடன் போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

47 யூடியூப், சமூக ஊடகங்கள், தொலைக்காட்கள் மீது வழக்கு
இதன் அடிப்படையில் 47 தொலைக்காட்சி, யூடியூப், செய்தித்தாள், சமூக வலைதளப்பதிவுகள் இனங்காணப்பட்டு வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சட்ட ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போக்சோ வழக்குகள், குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தைகளை அடையாளப்படுத்துவது சட்டப்படி குற்றம் என்கிற அடிப்படையில் கோவை மாணவியின் அடையாளத்தை பதிவிட்டவர்கள் அதை அழிக்கவும், இனி பதிவு செய்யாமல் இருக்கவும் போலீஸார் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
போலீஸாரின் எச்சரிக்கை அறிவிப்பு
"கடந்த நவம்பர் 12 ஆம் தேதி கோவை மாநகரம் உக்கடம் காவல் நிலைய சரகத்தில் வசித்து வந்த தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்ற 17 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோவை மாநகரின் அனைத்து மகளிர் காவல் நிலையம் (மேற்கு)போக்சோ சட்டம் 2012 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த மாணவியின் அடையாளங்களை வெளியிடக்கூடாது
இது தொடர்பாக வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. போக்சோ சட்டம் 2012 சட்டப்பிரிவு 23 மற்றும் அதன் உட்பிரிவின்படி பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விபரங்கள், பள்ளி, சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் என்ற விவரங்கள் உட்பட குழந்தையின் அடையாளத்தை எந்த ஊடகத்திலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களிலும் வெளியிடக்கூடாது. வெளியிட்டால் அது கண்டிக்கத்தக்க குற்றமாகும்.

எச்சரிக்கையை மீறி அடையாளத்தை பதிவு செய்யும் முயற்சி
இந்நிலையில் மேற்படி வழக்கு சம்பந்தமாக பல்வேறு சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகைகள் சுவரொட்டிகள், ஆர்ப்பாட்டங்களின் போது வைக்கப்படும் பிளக்ஸ் பேனர் போன்றவற்றில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது புகைப்படம், முகவரி, அவர் பயின்ற பள்ளி, அவரது வீடு உள்ளிட்ட விலாசம் அவர் பேசியதாக கூறப்படும் ஆடியோக்கள் மற்றும் பல விபரங்களை பகிர்ந்துள்ளனர்.
கடும் நடவடிக்கை காவல்துறை எச்சரிக்கை
எனவே பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் தனிநபர்கள், அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எக்காரணம் கொண்டும் போக்சோ சட்டத்தில் கூறியுள்ளபடி பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் விபரங்கள் எக்காரணத்தைக் கொண்டும் சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Recommended Video
அதை மீறி நடந்தால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது" இவ்வாறு கோவை மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications