கோவையில் வண்டியில் போவீங்களா.. இதை பாருங்க.. சாலையில் நடந்து போறவங்களுக்கு இதுதான் நல்ல செய்தி
கோவை: கோவை மாநகரில் பாதசாரிகள் சாலையை கடக்க வசதியாக 15 இடங்களில் சிக்னல் அமைக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ரோகித்நாதன் ராஜகோபால் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான மக்கள் தொகை மற்றும் மிகப்பெரிய தொழில்வளம் உள்ள நகரம் என்றால் அது கோவை தான். தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரான கோவை, இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரில் முக்கிய நகரமாக இருக்கிறது. இன்னும் 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவின் நுழைவு வாயிலாக உள்ள கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் கடந்த 10 வருடங்களில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சிக்னல்களில் வாகன ஓட்டிகள் காத்திருப்பதை தவிர்க்கவும் 56 இடங்களில் இருந்த சிக்னல்கள் அகற்றப்பட்டிருக்கிறது. மேலும் அந்த பகுதிகளில் யூடர்ன், ரவுண்டானா வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் நெரிசல் ஏற்படாத வகையில் சாலைகள் மாறி உள்ளதால் வாகன ஓட்டிகள் பல சிக்னல்களில் நிற்காமல் எளிதாக சென்று வருகிறார்கள்.
அதேநேரம் கோவையில் சில பகுதிகளில விபத்து ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளும் உள்ளன. இதை கண்டறிந்துள்ள போலீசார், விபத்துகளை குறைக்க புதிய முயற்சியில் இறங்கி உள்ளனர்.இதுபற்றி கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ரோகித்நாதன் ராஜகோபால் கூறுகையில், "கோவை மாநகரில் வாகன ஓட்டிகளுக்கு நகரின் வடக்கு, தெற்கு பகுதி சாலைகளில் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. அதேநேரம் கோவையின் கிழக்கு, மேற்கு பகுதிக்கு சென்று வரும் பாதைகளில் தான் பல்வேறு இடையூறுகள் உள்ளன. இதை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
தற்போது கிக்கானி சுரங்கப்பாதை, அவினாசி சாலை ரெயில்வே சுரங்கப்பாதை, லங்கா கார்னர், சோமசுந்தரா மில் சுரங்கப்பாதை ஆகிய 4 சந்திப்பு பகுதி வழியாக அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன. இதை 8 பகுதியாக மாற்ற வேண்டியதாக இருக்கிறது. இங்கு மழை காலங்களில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கோவையில் அவினாசி சாலை உள்பட பல்வேறு சாலைகளை கடக்க மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே நடந்து செல்பவர்கள் (பாதசாரிகள்) சாலையை கடக்க வசதியாக கூடுதலாக 15 இடங்களில் சிக்னல் அமைக்க திட்டமிட்டு வருகிறோம். வடகோவை மேம்பாலம் கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. அது அந்த காலகட்டத்தில் இருந்த போக்குவரத்திற்கு ஏற்ப கட்டப்பட்டிருந்தது.
தற்போது வடகோவை மேம்பாலத்தில் கூடுதலாக பில்லர் அமைத்து மேம்பாலத்தை விரிவுப்படுத்த ஆலோசித்து வருகிறோம். அதற்கான இடவசதியும் இருக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய திட்டம் தயாரித்து பணிகள் நடத்தலாமா என சம்பந்தப்பட்ட துறையினரிடம் கேட்டு உள்ளோம். கோவை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. எனவே அதை ஒரு வழிப்பாதையாக மாற்ற ஆலோசனை நடத்தி வருகிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications