கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!
கோயம்புத்தூர்: கோவை நகர மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமாக விளங்கும் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையக் கட்டுமானம், கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இன்றி முடங்கிக் கிடந்தது. தற்போது இந்தத் திட்டத்தை மீண்டும் தூசி தட்டித் தொடங்குவதற்குக் தமிழக அரசு முறைப்படி பச்சைக்கொடி காட்டியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் அவர்கள் சமீபத்தில் இப்பகுதியில் நேரில் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத் துறை இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் வெள்ளலூர் பேருந்து நிலையப் பணிகள் மிக விரைவில் புத்துயிர் பெறவுள்ளன.

திட்டம் முடங்கிய பின்னணி
கோவையின் மையப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக வெள்ளலூரில் பிரம்மாண்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காகக் கோவை மாநகராட்சி ஏற்கனவே 54 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து, ஆரம்பகட்டக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருந்தது.
எனினும், கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல்வேறு நிர்வாகக் காரணங்களாலும், அரசியல் சூழல்களாலும் இந்தத் திட்டம் முற்றிலும் முடங்கிப் போனது. இதனால் போடப்பட்ட சாலைகளும், கட்டப்பட்ட தற்காலிக அமைப்புகளும் பயன்பாடின்றி வீணாகும் நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில்தான், புதிய அரசு திட்டத்தைத் தொடர ஒப்புதல் அளித்துள்ளதாகக் கோவை மாநகராட்சி ஆணையர் எம்.சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மாறிய மதிப்பீடு
ஐந்து ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால், கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனைக் கணக்கில் கொண்டு, தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப புதிய மாற்று மதிப்பீடு (Revised Estimate) தயார் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையக் கட்டுமானத்தின் ஆரம்பத் திட்டத்தில் சில சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. பேருந்து நிலையப் பணிகளை முழுமையாக முடிப்பதற்கு இன்னும் கூடுதலாக 148 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) இன்னும் ஒரு வாரத்திற்குள் அரசுக்கு முறைப்படி சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதாவது இந்த வார இறுதிக்குள் (மே 31-க்குள்) அறிக்கை முழுமையாகச் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கம்
வெள்ளலூர் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் (Approach Roads) குறுகலாக இருப்பது குறித்துப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கவலை தெரிவித்து வந்தனர். இதற்குத் தீர்வு காணும் வகையில், நீலாம்பூர் பைபாஸ் சாலையைத் தமிழக அரசிடம் ஒப்படைத்த பிறகு, அதனை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், செட்டிபாளையம் - போத்தனூர் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்துமாறு மாநில நெடுஞ்சாலைத் துறைக்குக் கோரிக்கை வைக்கப்படும் என்றும் மாநகராட்சி ஆணையர் உறுதி அளித்துள்ளார்.
'டூயல் கான்செப்ட்' (Dual Concept) புதிய திட்டம்
மாநகராட்சி இந்த வளாகத்தை வெறும் பேருந்து நிலையமாக மட்டும் பயன்படுத்தாமல், "பேருந்து நிலையம் மற்றும் லாரி முனையம் (Truck Yard)" ஆகிய இரண்டும் இணைந்த ஒரு கூட்டு வளாகமாக (Dual Concept) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் முதற்கட்டமாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளை (Mofussil Buses) இங்கிருந்து இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுடன், வணிக ரீதியிலான சரக்கு வாகனப் போக்குவரத்தையும் எளிதாகக் கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் இந்தத் திட்டம் இன்னும் சில மாதங்களில் முழு வீச்சில் வேகம் எடுக்கும் எனப் பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வெடிக்கும் எதிர்ப்புகள்
மாநகராட்சியின் இந்த லாரி முனையம் (Truck Yard) திட்டத்திற்கு கோவையின் நுகர்வோர் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இங்கு லாரிகளைக் கொண்டு வந்தால் பேருந்து நிலையத்தின் உண்மையான நோக்கமே சிதைந்துவிடும். மேலும், அருகிலுள்ள வெள்ளலூர் குப்பைக்கிடங்கால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு மாநகராட்சி முதலில் தீர்வு காண வேண்டும் என கருத்து நிலவுகிறது.
சரவணம்பட்டி போல வெள்ளலூர் பகுதி வளர்ச்சியடைய வேண்டுமானால் இது முழுமையான பேருந்து நிலையமாக மட்டுமே இருக்க வேண்டும். போத்தனூர் ரயில் நிலையம் (2-வது ரயில் முனையமாக மாறி வருகிறது), திருச்சி சாலை மற்றும் விமான நிலையச் சாலை ஆகியவற்றை எளிதாக இணைக்கும் பகுதி இது என்பதால், குறுகலான அணுகுசாலைகளை நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நிலத்தைக் கையகப்படுத்த வேண்டுமே தவிர, லாரி முனையமாக மாற்றக் கூடாது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications