முன் தேதியிட்ட செக் தெரியும்.. இறப்பு சான்றிதழ்லயும் இப்படியா? - கோவையில் ‘பகீர்’ சம்பவம்!
கோவை : மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே, அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய கொடுமை கோயம்புத்தூரில் அரங்கேறியுள்ளது.
கோவை ரயிலில் ஒருவர் தவறவிட்ட இறப்பு சான்றிதழ் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சான்றிதழில் மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இறந்ததாக சான்று அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவை ரயில்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கோவைக்கு வேலைக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் என நாள் தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் வந்த ரயிலில் பயணி ஒருவர் இறப்பு சான்றிதழ் ஒன்றினை தவறவிட்டுச் சென்றுள்ளார்.

இறப்பு சான்றிதழ்
அதனை கண்டெடுத்த மற்றொரு பயணி ஒருவர் சான்றிதழை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேலாளர் பிரசன்னாவிடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து வாட்ஸ்-அப் குழுக்களில் தகவல் அனுப்பியதன் மூலம் சான்றிதழுக்கு உரியவர் ரயில் நிலையத்திற்கு நேரில் வந்து அந்த இறப்பு சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன்பே
இந்த நிலையில் வாட்ஸ்-அப் குழுக்களில் பதிவிடப்பட்ட அந்த சான்றிதழ் தான் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. சான்றிதழில் மூதாட்டியின் பெயர் ரங்கம்மாள் எனவும், இறந்த தேதி 18-05-1999 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சான்றிதழ் வழங்கிய தேதி 09-06-1990 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அந்த மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக இதன் மூலம் தெரிய வருகிறது.

அதிகாரிகளின் தவறு
கோவை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியை தவறுதலாக குறிப்பிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சான்றிதழ் தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications