கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலுக்கு சரியாக ஒரு மாதம் கூட இல்லை என்பதால் தொகுதிகளை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதில் கம்யூனிஸ்ட்கள் அதிகம் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டன. கோவை தெற்கு காங்கிரஸ் கட்சிக்கும், சூலூர் கொமதேகவுக்கும், வால்பாறை (தனி) இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளிலும் தோல்வியடைந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள்
2026 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுகவில் உள்ள ஏராளமான கூட்டணி கட்சிகள் முயற்சி செய்தன. காங்கிரஸ், கொமதேக, தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மநீம உள்ளிட்ட கட்சிகள் முட்டி மோதின. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியில்லை என்று விலகிவிட்டது. மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றதால் தாமதம் ஏற்பட்டது.
தற்போது திமுக கூட்டணிகளுக்கான தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை போலவே இந்தமுறையும் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகள் தான் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், பொள்ளாச்சி தொகுதி கொமதேகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக பலமாக உள்ள கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 கட்சிகள் ஒதுக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கம்யூனிஸ்ட்கள் ஏமாற்றம்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016, 2021 ஆகிய 2 தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இரண்டிலும் காங்கிரஸ் தோல்வியடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக வானதி சீனிவாசன் வெற்றி பெற காங்கிரஸ் கட்சியின் மந்தமான செயல்பாடு காரணம் என்று புகார் எழுந்தது. அதனால் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்க கூடாது என்று திமுகவினர் தெரிவித்தனர்.
ஆனால் கோவையின் மிகப்பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம், தொழில் மையமான சிங்காநல்லூர் ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கணிசமாக இருப்பதால் சிங்காநல்லூர் தொகுதியை சிபிஎம் கட்சியும் கேட்டது. கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவைக்கு பதிலாக சிபிஎம் கட்சிக்கு திண்டுக்கல் ஒதுக்கப்பட்டது.
திமுகவினர் அதிர்ச்சி
அதனால் சிங்காநல்லூர் தொகுதி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அது நடைபெறவில்லை. இதேபோல கடந்நதமுறை சிபிஐ கட்சிக்கு வால்பாறை தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு ஏற்கனவே சிபிஐ வென்றுள்ளது. இந்தமுறையும் சிபிஐ வால்பாறை தொகுதியை எதிர்பார்த்து கேட்டனர். ஆனால் அவர்களுக்கும் கோவையில் தொகுதி ஒதுக்கப்படவில்லை.
பொள்ளாச்சியில் கொமதேக தீவிரமாக முயற்சி செய்து வந்த நிலையில், அவர்களுக்கு கொடுத்தால் பொள்ளாச்சியில் திமுக வெற்றி பெறாது என்று நேர்காணலில் திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடமே தெரிவித்தனர். அதையும் மீறி பொள்ளாச்சி தொகுதி கொமதேவுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது அங்குள்ள திமுக நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications