கிட்னியை கூட திருட ஆரம்பிச்சுட்டாங்க.. திமுகவினர் மருத்துவமனைக்கு போனா உஷாரா இருங்க.. எடப்பாடி அட்டாக்
கோவை: திமுக இருக்கும்வரை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இப்போது மக்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட ஆரம்பித்துவிட்டனர். திமுகவினரின் மருத்துவமனைக்குச் சென்றவர்கள் எல்லாரும், உடல் உறுப்புகள் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்தது உண்மை என்று திமுக அரசே சொல்லிவிட்டது. ஆனால் நடவடிக்கை மட்டும் எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் பிரசாரம் செய்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எழுச்சி பயணத்தினை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அப்போது ஆளும் திமுக அரசின் செயல்படுத்தப்படாத திட்டங்கள், ஆட்சியில் நடக்கும் குறைகளை சொல்லி மக்களிடம் பேசி வருகிறார்.

அத்திக்கடவு - அவினாசி திட்டம்
அந்த வகையில் நேற்று கோவை சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளை அடுத்து அவினாசி தொகுதியில் சேவூர் சாலை கிழக்கு ராஜவீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை அவினாசி மக்களின் 50 ஆண்டு கால போராட்டம் அத்திக்கடவு - அவினாசி திட்டம்.. நீங்க எல்லாரும் போராடியதன் காரணமாக அம்மா இதனை நிறைவேற்றுவதாக அறிவித்தார். அம்மா மறைந்தாலும் அவரது வாக்குறுதியை நிறைவேற்றி, நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தேன். முழுக்க மாநில அரசின் நிதி 1,652 கோடி ரூபாய் ஒதுக்கி துரிதமாக பணிகள் நடந்தன. கொரோனா காரணமாக இந்த பணி தொடர முடியாமல் தாமதம் ஏற்பட்டது.
அணைகள் கட்டப்பட்டதா
அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில், அப்படியே இந்த திட்டத்தை முடக்கிவிட்டார்கள். அதிமுக ஆட்சியிலிருக்கும் போது சுமார் 85 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதி 15 சதவீத பணிகளை முடித்து நிறைவேற்ற கோரியதால் தான் அதனை முடித்தது. ஆனால் அதற்குமான கால தாமதம் செய்தது. அதிமுகவின் தொடர்ச்சியான அழுத்தத்தாலேயே இந்த திட்டம் நிறைவேறியது. ஆனாலும் கூட இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும், இந்த திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
எப்போதும் நீர் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மேட்டுப்பாளையம் டூ பவானி வரை 6 தடுப்பணைகள் அறிவித்தோம். அவற்றில் 2 அணைகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சியால் இது அப்படியே விட்டு விடப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி வந்ததும் தடுப்பணை உயரம் அதிகரிக்கப்படும். ஏழை மக்களுக்கு கல்வி கொடுக்க குறைந்த கட்டணத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்துக் கொடுத்தோம். திமுகவின் 52 மாத ஆட்சியில் அவினாசிக்கு ஏதாவது பெரிய திட்டம் கொடுத்தார்களா? ஒன்றுமே இல்லை.
மக்களுக்குப் பாதுகாப்பில்லை
அதிமுக ஆட்சியை தேசிய அளவில் சிறந்த அரசு என்பதை நிரூபித்தோம். எல்லா துறைகளும் சிறப்பாக செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளைப் பெற்றோம். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான்.
திமுக அரசுக்கு விருது கொடுக்கவேண்டும் என்றால் போதைப்பொருளை கட்டுப்படுத்தவில்லை என்று விருது கொடுக்கலாம். ஒரு டிஜிபி இருந்தார், 2.0, 3.0, 4.0 என்று கஞ்சாவுக்கு ஓ போட்டுக்கொண்டே ஓய்வுபெற்றுவிட்டார். ஸ்டாலின் பேசும்போது, இரவில் கண்மூடி காலையில் கண்விழிக்கும்போது, கட்சியினரால் ஏதாவது பிரச்னை வந்துவிடுமோ என்று அச்சத்தில் விழிக்கிறேன் என்றார். திமுக இருக்கும்வரை மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. திமுககாரர்கள் கஞ்சா விற்கிறார்கள்.
கிட்னி திருட ஆரம்பித்துவிட்டனர்
திமுகவினரின் மருத்துவமனைக்குச் சென்றவர்கள் எல்லாரும், உடல் உறுப்புகள் பத்திரமாக இருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொள்ளுங்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடந்தது உண்மை என்று திமுக அரசே சொல்லிவிட்டது. ஆனால் நடவடிக்கை மட்டும் எடுக்கவில்லை. தங்கம், வெள்ளி, பணம் திருடுவார்கள். இப்போது கிட்னி திருட ஆரம்பித்துவிட்டனர். மக்களின் வறுமையை பயன்படுத்தி விலைபேசி கிட்னி எடுக்கப்படுகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதெல்லாம் முழுமையாக விசாரிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விலைவாசி உயர்ந்துவிட்டது
விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்குப் போய்விட்டது. உணவுப் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது. அரிசி, பருப்பு, எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள்: அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். திமுக அரசு மூலம் முழுமையான உணவுப் பொருட்கள் கூட கொடுக்க முடியவில்லை; நிறைய புகார்கள் வருகிறது. கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு கொடுத்தோம். கொரோனா காலத்தில் விலை மதிக்கமுடியாத உயிர்களை காப்பாற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications