உழைச்சி உழைச்சி ஓடா போயிட்டோம்..குமுறிய கோவை கவுன்சிலர்! உட்காரும்மா பேசிக்கலாம்.. கேஎன் நேரு டென்ஷன்
கோவை: நெல்லை, கோவை மாநகராட்சிகளில் மேயர்கள் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. நேற்று நெல்லை மேயர் தேர்தல் முடிவு அடைந்த நிலையில் இன்று கோவை மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதனிடையே தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள் கேஎன் நேரு, முத்துசாமி முன்னிலையில் பெண் கவுன்சிலர் ஒருவர் ஆவேசமாக பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனா ஆனந்த குமாரும், நெல்லை மேயராக இருந்த சரவணனும் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரே நாளில் தங்கள் மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர்.

தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் பொறுப்பேற்றது தொடங்கி பதவியை விட்டு விலகும் வரை கவுன்சிலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உடல் நலம் மற்றும் சொந்த காரணங்களுக்காக கோவை மாநகராட்சி மேயர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார். அதேபோல நெல்லை மேயராக இருந்த சரவணன் குடும்ப சூழல் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து இருந்தார். குறிப்பாக சரவணன் மீது ஏற்கனவே நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக கவுன்சிலர்கள் கடிதத்தை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் எழுந்து நிலையில் மாநகராட்சி கூட்டத்தை நடத்த முடியாமல் இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதனால் தங்கள் பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெறவில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் தான் கல்பனாவும், சரவணனும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டு அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து எப்போது மேயர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் காலியாக உள்ள நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி மேயர் தேர்தலை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததையடுத்து நேற்று நெல்லை மேயர் தேர்தல் நடத்தப்பட்டது. நெல்லை மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 வார்டு கவுன்சிலர்கள் திமுக கூட்டணிக்கு உள்ளனர். இதை அடுத்து நேற்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு முன்னிலையில் திமுக கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதை அடுத்து மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் கடைசி நேரத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பவுல்ராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். மதியம் ஒரு மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். ராமகிருஷ்ணன் முப்பது வாக்குகள் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக தலைமை உத்தரவிட்டதற்கு எதிராக பவுல்ராஜ்க்கு சில திமுக கவுன்சிலர்கள் வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பவுல்ராஜ் வேட்பு மனுவை திமுக கவுன்சிலர், மதிமுக கவுன்சிலரும் முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 14 பேர் பவுல்ராஜ்க்கு வாக்களித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது. கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டுகள் இருக்கும் நிலையில் அதில் 96 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இப்போதைய மேயர் தேர்தலில் 29வது வார்டு கவுன்சிலரான ரங்கநாயகி மேயர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை மாநகராட்சியின் இரண்டாவது பெண் மேயர் என்ற பெருமையை ரங்கநாயகி பெற்றார்.
முன்னதாக மேயர் தேர்வு தொடர்பாக திமுக கவுன்சிலர்கள் கூட்டம் காளப்பாடியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்களான கேஎன் நேரு, முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கொடுத்த கடிதத்தை அமைச்சர் கேஎன் நேரு வாசித்தார். அப்போது மற்ற கவுன்சிலர்கள் கைதட்டி ஆரவாரம் செய்த நிலையில் திடீரென திமுக கவுன்சிலரும், பணிகள் குழு தலைவரான சாந்தி முருகன் ஆவேசமாகி கேள்வி எழுப்பினார்.
"கட்சிக்காக பல ஆண்டுகள் உழைத்து உழைத்து ஓடாக தேய்ந்து விட்டேன். கட்சிக்காக 50 வருஷம் கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் பணத்தை இழந்து இருக்கிறேன். சும்மா இந்த இடத்திற்கு வந்து விடவில்லை. இதையெல்லாம் பார்த்துகிட்டு என்னால் பொறுமையாக இருக்க முடியாது" என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அப்போது அமைச்சர் முத்துச்சாமி, கேஎன் நேரு ஆகியோர் அவரை சமாதானம் செய்தனர்.
இதனையடுத்து ஆவேசமாகப் பேசிய படி, சாந்தி முருகன் வெளியே வந்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இரு மாநகராட்சி தேர்தல்களிலும் திமுக கவுன்சிலர்கள் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications