"அந்த பொண்ணு, அங்க ஏன் போகணும்?" வந்து விழுந்த கேள்வி! கமிஷனர் அளித்த பதில் என்ன தெரியுமா?
கோவை: "அந்த நேரத்தில் அந்த பொண்ணு அங்க ஏன் போகணும்" என வந்த கேள்விக்கு கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர் அளித்த பதில் என்ன தெரியுமா?
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அதில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் நேற்று சுட்டு பிடிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் காவலன் எனும் செயலியை தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இது போன்று ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் காவலன் ஆப் செயலியை மூன்று முறை ஷேக் செய்தால் போதும். அதிலிருந்து SOS Call அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்துவிடும். 100-க்கு கூட போன் செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
இல்லாவிட்டால் காவலன் ஆப்பை ஓபன் செய்து அதில் எஸ்ஓஎஸ் என்ற பட்டனை மட்டும் பிரஸ் செய்தால் போதுமானது. எனவே இந்த செயலியை பெண்கள் தங்கள் போனில் பதிவிறக்கம் செய்து கொண்டு ஆபத்தான காலங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், "அந்த பெண் குறித்து நிறைய பேர் நரேட்டிவ் செட் செய்கிறார்கள். அந்த பொண்ணு அந்த இடத்திற்கு போனது தவறு என்கிறார்கள். சமூகவலைதளங்களில் அந்த பெண்ணுக்கு எதிராக பதிவுகள் போடப்படுகின்றன. இது குறித்து உங்கள் கருத்து என்ன" என கேட்டார்.
அதற்கு சரவண சுந்தர் ஐபிஎஸ் கூறுகையில், ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எந்த வித தீர்ப்பையும் பொதுமக்கள் வெளியிட வேண்டாம். எனவே அந்த பொண்ணு செய்தது சரியா தவறா என்றெல்லாம் யாரும் விவாதித்துக் கொண்டிருக்க வேண்டாம். அது அவர்களது சுதந்திரம், அவர்களது இஷ்டம்! என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் படிக்கும் கல்லூரியில் விசாரணை நடத்தினீர்களா என்ற கேள்விக்கு, கடந்த இரு தினங்களாக குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தோம். அவர்களை கண்டுபிடித்துவிட்டோம். இனி அனைத்து விதமான விசாரணைகளும் நடக்கும் என்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை எத்தனை மணிக்கு கண்டுபிடித்தீர்கள் என்ற கேள்விக்கு ஆணையர் பதிலளிக்கையில் அதிகாலை 4 மணிக்கு மீட்டோம் என்றார்.
அந்த பெண்ணும் அந்த ஆண் நண்பரும் எப்படி பழகினார்கள், எவ்வளவு நாளாக காதலித்து வந்தார்கள் என்ற கேள்விக்கு சரவண சுந்தர், "அதெல்லாம் தற்போது தேவையில்லாத ஒன்று! அது அவர்களது தனிப்பட்ட விஷயம். கைது செய்யப்பட்டவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications