கோவையில் போதை ஸ்டாம்ப்.. “நாக்கில் வச்சா அவ்ளோதான்”! கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்ற 5 பேர் கைது
கோவை: கோவையில் சில இளைஞர்கள், பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து 'போதை ஸ்டாம்ப்'களை விற்று வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
கஞ்சா, ஹெராயின், கொக்கெயின், அபின் போன்ற பல்வேறு வடிவங்களில் போதைப் பொருட்கள் புழங்கி வரும் நிலையில்,எல்.எஸ்.டி ஸ்டாம்ப் வடிவிலான போதைப் பொருளின் பயன்பாடு சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், குறிப்பாக கோவையில் இதன் பயன்பாடு அதிகரிக்க தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை ஸ்டாம்ப் விற்ற இளைஞர்கள்
கோவை சரவணம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர்கள் கணபதி பகுதியை சேர்ந்த ரேவந்த் (எ) அபி (வயது 23), ரத்தினபுரியைச் சேர்ந்த பெலிக்ஸ் பிரதீப் (25), வடவள்ளியைச் சேர்ந்த பிரதீஷ் (20) என்பதும், அவர்கள் பெங்களூரில் இருந்து கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை ஸ்டாம்புகளை விற்று வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வர்ஷத்குமார்(22), ஹரிபிரசாத்(21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்துள்ளனர்.
போதை ஸ்டாம்ப்
மற்ற போதைப் பொருட்களுடன் ஒப்பிடும் போது, 'ஸ்டாம்ப்' வடிவ போதைப் பொருள் வித்தியாசமானது. இதை பயன்படுத்துவதை அருகில் இருப்பவர்களால் கூட கண்டுபிடிக்க முடியாது. 'ஸ்டாம்ப்' வடிவிலான போதைப்பொருட்களை கடத்தி வந்து இளைஞர்கள், இளம்பெண்கள், கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்யும் போக்கு கோவையில் அதிகரித்து வருகிறது.
லைசெர்ஜிக் டை எத்திலமைடு என்ற வேதிப் பொருளை, தண்ணீரில் கரைத்து, அதை சிறிய அட்டை வில்லைகளின் பின்பகுதியில் ஊற்றி திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாற்றுகின்றனர். இந்த ஸ்டாம்பை நாக்கில் வைத்துக் கொண்டால், போதை ஏறும். அதில் உள்ள வேதிப்பொருள் கரைந்து அதிக போதையைத் தூண்டும். சுமார் 8 முதல் 13 மணி நேரம் இந்த போதை இருக்கும். இதை வைத்துக்கொண்டால் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாது.
கோவையில் போதை ஸ்டாம்ப் விற்பனை
ஒரு ஸ்டாம்ப் வில்லையில் ஒரு மில்லி கிராம் அளவுக்கு போதைப்பொருள் இருக்கும். இது டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களிலும், கோவா போன்ற இடங்களிலும் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. கோவையிலும் தற்போது ஊடுருவத் தொடங்கியுள்ளது. ஸ்டாம்ப் வடிவ போதைப் பொருளை அதிகளவில் கோவாவில் இருந்து வாங்கி வரும் ஏஜென்டுகள், சப்-ஏஜென்டுகள் மூலம் கோவை உள்ளிட்ட இடங்களில் விற்று வருவதாக கூறப்படுகிறது.
எல்.எஸ்.டி ஸ்டாம்ப் வடிவ போதைப் பொருளை கடத்தி வருவது சுலபம். புத்தகங்களுக்கு இடையே வைத்துக்கூட கடத்தி விடலாம். எனவே இவற்றை கண்காணிப்பது சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications