கோவை பெண் யானை உயிரிழப்பு.. வெடிவிபத்தே காரணம்.. மருத்துவக் குழு கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
கோவையில் யானை உயிரிழப்புக்கு வெடி விபத்தே காரணம் என்று தெரிய வந்துள்ளது.
கோவை: கோவையில் வாயில் காயமடைந்த பெண் யானையின் உயிரிழப்புக்கு காரணம் வெடி விபத்து என்று உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவ குழு அறிக்கை அளித்துள்ளனர். அதில், யானை வெடி மருந்தினை கடித்ததால், வெடி மருந்து வெடித்து யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்ததாகவும், இதனால் உடல் பலவீனமாக இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமாதையனூர், முத்துக்கல்லூர் கிராமங்களில் காட்டு யானை வாயில் காயத்துடன் சுற்றி திரிந்து வந்தது.
விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் யானையை பிடிக்க வேண்டும் அல்லது வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை
இதைத்தொடர்ந்து டாப்ஸ்லிப் கோழிகமுத்தி முகாமில் இருந்து சின்னதம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டது. பின்னர் காயத்துடன் சுற்றி திரிந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கும்கி யானை உதவியுடன் யானையை பிடித்து லாரியில் ஏற்றி டாப்சிலிப் வரகளியாறு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.

யானை உயிரிழப்பு
மரக்கூண்டில் அடைப்பு பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த மரக்கூண்டில் யானையை வனத்துறையினர் அடைத்தனர். மேலும் மற்ற காட்டு யானைகள் முகாமிற்கு வருவதை தடுக்க கும்கி யானைகள், பாகன்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மருத்துவ குழுவினர் யானையின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். யானையால் சாப்பிட முடியாத நிலையில், அதற்கு குளுக்கோஸ் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

உடற்கூறாய்வில் அதிர்ச்சி
நேற்று இந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று யானைக்கு வன கால்நடை மருத்துவ குழுவினர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் யானை வெடி மருந்து உண்டதன் காரணமாக விபத்து ஏற்பட்டு தாடை மற்றும் பற்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்கருமான ராமசுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வெடிமருந்தை உண்ட யானை
அந்த அறிக்கையில், மருத்துவக் குழுவினரால் இறந்த பெண் காட்டு யானைக்கு உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின் முடிவில், யானை வெடி மருந்தினை உண்டதால் வெடி மருந்து வெடித்து யானையின் தாடை மற்றும் பற்கள் சேதமடைந்துவிட்டது. இதனால் யானையினால் உணவு உட்கொள்ள முடியாமல் உடல் பலவீனமாக இறந்து விட்டதாக மருத்துவக் குழுவினரால் அறிக்கை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications
