விரிவடைகிறது கோயம்புத்தூர் மாநகராட்சி.. தமிழக அரசு மாஸ்டர் பிளான்.. கோவைக்கு பிறந்தது விடிவுகாலம்
கோவை: கோவை மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும்நிலையில், அதற்கான நல்ல செய்தி இப்போது வந்துள்ளது.
தென்னிந்தியாவிலேயே 4வது பெரிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி திகழ்ந்து வருகிறது.. கடந்த 2011ல் கோவை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டபோது, 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் மற்றும் ஒரு கிராம ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டு, 152 சதுர கிமீ பரப்பிலிருந்த மாநகராட்சி, 254 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்டது.

மத்திய அரசு: அதேபோல, மண்டலங்களின் எண்ணிக்கையும் 5ஆகவும், வார்டுகளின் எண்ணிக்கை 100 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், பாதாள சாக்கடை, குடிநீர்த் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக கிடைக்கவில்லை. அதேபோல, மத்திய அரசின் திட்டங்களான ஸ்மார்ட் சிட்டி, அம்ருட், ஸ்வச் பாரத் போன்ற திட்டங்கள், இந்த இணைப்பு பகுதிகளில் செய்யப்படவில்லை.
ஆனால் தற்போது நாளுக்கு நாள், குடியிருப்புகளும் மக்கள் தொகையும் இங்கு பெருகிக்கொண்டேயிருக்கிறது.. எனவே, நகர வளர்ச்சியின் காரணமாக, அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்களை, பிற பகுதிகளுடன் ஒருங்கிணைத்து நிறைவேற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி: அதேபோல, அடிப்படை வசதிகளையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய அவசியமும் கோவை மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.. முக்கியமாக, புறவழிச்சாலை வசதிகள், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து திட்டங்கள் போன்றவற்றை தற்போதுள்ள மக்கள் தொகை அடிப்படையிலேயே நிர்ணயிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுடள்ளது.
அதனால்தான், கோவை மாநகராட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு எல்லையை விரிவுப்படுத்தி வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்று கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்தவாறே உள்ளார்.
வார்டுகள்: அதுமட்டுமல்ல, கோவையில் உள்ள சில வார்டுகளில் வாக்காளர் எண்ணிக்கையில் பெரும் வேறுபாடு உள்ளதால், ஊரக உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருவதையும் மறுக்க முடியாது.
இந்நிலையில், கோவை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய, மாவட்ட நிர்வாகத்திடம் தமிழக அரசால் கருத்துரு கோரப்பட்டுள்ளது.. இதனால், கோவை மாநகராட்சிப் பகுதிகளை ஒட்டியுள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் கருத்துகளை கேட்டு, தீர்மானங்களை வாங்கி, அரசுக்கு கருத்துரு அனுப்பும் பணியில், மாவட்ட நிர்வாகமும் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
செயல்வடிவம்: ஏற்கனவே, ஒருசில உள்ளாட்சிகளை தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் கோவை நகருடன் இணைந்து விட்டது.. இப்போது, மிச்சமுள்ள உள்ளாட்சிகளையும் கோவையுடன் இணைக்கும் முயற்சியும் நடக்கிறதாம். அப்படி இணைத்துவிட்டால் பெருநகரங்களுக்கான பெரிய திட்டங்களில் அந்தந்த பகுதி மக்களும் பயன்பெறக்கூடும் என்றே எதிர்பார்க்கபபடுகிறது.
எனினும், இந்த விவகாரத்தில் நகரை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கருத்துக் கேட்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றி வாங்கிய பிறகே, ஒருமித்த கருத்துருவை இதில் உருவாக்க முடியும் என்பதால், கால அவகாசம் தேவைப்படும் என்கிறார்கள்..
மகிழ்ச்சி: அதுமட்டுமல்ல, விரிவாக்கத்தை அரசு இறுதி செய்தபின்பே, வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது பற்றி, முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.. ஆகமொத்தம், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை, தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது கோவைக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறதாம்.












Click it and Unblock the Notifications