வண்டலூர் பூங்கா என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? அமைச்சருக்கு திமுக ஐடி விங் கண்டனம்
சென்னை: வரும் ஜூன் 22 ஆம் தேதி முதல்வர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி வண்டலூர் பூங்காவில் பொதுமக்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்படும் என தமிழக வனத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு திமுக ஐடி விங் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் முதல்வர் பிறந்தநாளையொட்டி வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் வரும் ஜூன் 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் 3 முக்கிய வன உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்களுக்கு கட்டணமில்லா இலவச அனுமதி வழங்கப்படுகிறது.
வண்டலூர் பூங்கா, வேலூர் அமிர்தி பூங்கா, சேலத்தில் உள்ள குரும்பட்டி உயிரியல் பூங்காவில் இரு நாட்கள் இலவசமாக செல்லலாம். இதற்கான முழு கட்டணத்தையும் எங்களது குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை செலுத்தும் என தெரிவித்திருந்தார்.
கட்டணத்தை யார் செலுத்துவார்கள் என அமைச்சர் தெளிவாக கூறிய பிறகு, திமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது. அதற்கு தவெக ஐடி விங் பதிலடியும் கொடுத்துள்ளது.
இதுகுறித்து திமுக ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே? நேற்று 'வெள்ளை அறிக்கை' விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்?
இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு? முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு தவெக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா, அரசு பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போக? கடும் நிதிச்சுமையில் கூட கடலில் பேனா கட்டுவோம் என மக்கள் பணத்தை கரைக்க முயன்ற அறிவாலயம் க்ரூப் அல்ல நாங்கள். 10 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கையிருப்பு என பொய் சொல்லி டிஃபெண்டரில் உலா வரும் உங்கள் முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ., செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் எங்கள் தலையில் கட்டாதீர்கள் என விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications