நள்ளிரவில் பரபரப்பு.. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து! என்ன நடந்தது
கோவை: மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் நடந்த தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தளம் என்றால் அது ஊட்டி தான்.. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பேர் ஊட்டிக்குச் சுற்றுலாவுக்கு வருகிறார்கள்.

அதிலும் கோடைக் காலங்களில் ஊட்டிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவர அங்கே மலர் கண்காட்சி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்..
மேட்டுப்பாளையம் ரயில் நிலையம்: அதிலும் அங்குள்ள நீலகிரி மலை ரயிலில் பயணிக்கவே வெளிநாடுகளில் இருந்தும் கூட சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த மலை ரயிலுக்கு மட்டும் எப்போதும் டிக்கெட் ஹவுஸ் புல்லாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலை ரயில் தினசரி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் காலை 7 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில் பகல் 12 மணியளவில் ஊட்டி சென்றடையும்.
ஊட்டிக்குச் செல்லப் பல வழிகள் இருந்தாலும், மலை ரயிலில் சென்றால் இயற்கை அழகைக் கலக்கலாக ரசிக்கலாம். இந்த அழகான பயணத்திற்காகவே தினசரி பல நூறு பேர் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும், மாநிலத்தில் முக்கிய நகரங்களுக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நேற்றிரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து: இந்த தீ விபத்தில் ரயிலை இயக்கும் மின்னணு சாதனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 2 மணிக்கு நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்கள் எரிந்து சேதம் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நள்ளிரவு நேரத்தில் ரயில் நிலையத்தில் நடமாட்டம் குறைவாகவே இருந்த நிலையில், இந்த தீ விபத்தால் பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை.. மேலும், இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் இதுவரை தெரியவில்லை. இந்த தீ விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இது தொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications