"மருதமலை மாமணியே முருகைய்யா".. பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு.. காவல் துறையின் முக்கிய அறிவிப்பு
கோவை: தைப்பூசத்தை முன்னிட்டு, கோவை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கோவை மாநகர காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசிக்கவுள்ளனர். இந்நிலையில், அதிக அளவில் பக்தர்களின் வரத்து இருக்கும் என்பதால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

கோவை மருதமலை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலைப் பாதையில் வாகனங்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை மலைப் பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தைப்பூசத்தை முன்னிட்டு, பிப்ரவரி 5ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. இன்று பகல் 12.10 முதல் 12.30 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. பிப்ரவரி 11ஆம் தேதி நண்பகல் 11 மணிக்குத் தைப்பூசத் திருத்தேர் வடம் பிடித்தல் மற்றும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 4.30 முதல் 7.30 மணி வரை தெப்பத் திருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
தைப்பூசத் திருவிழாவுக்கு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் பிப்ரவரி 13, 14 ஆகிய நாட்களில் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிப்ரவரி 9 முதல் 12 வரை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் மலைப் பாதையில் செல்ல அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பக்தர்கள் மலைப் படிகள் வழியாக அல்லது கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்து கொள்ள முடியும்.
இந்நிலையில், கோவை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வரும் வகையில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து கோவை மாநகர காவல் துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது, பொது மக்களுக்கு கோவை மாநகர காவல் துறையின் அன்பான அறிவிப்பு வரும் 10.02.2025 மற்றும் 11.02.2025 ஆம் தேதிகளில் நடைபெறும் தைபூச திருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு மருதமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் போக்கவரத்து நெரிசலை தவிர்க்கவும் மேற்படி கோவிலுக்கு பாதையாத்திரையாக வரும் பக்தர்கள் பாதுகாப்பாக சென்று வர கீழ் கண்ட இடங்களில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.
நான்கு சக்கர வாகனங்கள்: நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொது மக்கள் மற்றும் பக்கதர்கள் 1) தைலக்காடு பார்க்கிங், 2) இந்திரா நகர் பார்க்கிங். 3) வள்ளியம்மாள் கோவில் பார்க்கிங் மற்றும் 4) சட்டக்கல்லூரி பார்க்கிங் பகுதிகளில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு தேவஸ்தான பேருந்து மூலமாகவும் அல்லது படிக்கட்டு வழியாகவும் கோவிலுக்கு சென்று வரலாம்.
இரண்டு சக்கர வாகனங்கள்: இரண்டு சக்கர வாகனங்களில் வரும் பொது மக்கள் மற்றும் பக்கதர்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை பேருந்து நிலையத்தின் பின்புறமும் அல்லது பொதிகை பார்க்கிங்கிலும் நிறுத்திவிட்டு தேவஸ்தான பேருந்து மூலமாகவும் அல்லது படிக்கட்டு வழியாகவும் கோவிலுக்கு சென்று வரலாம்.
எனவே, கோவிலுக்கு வரும் பக்கதர்கள் மற்றும் பொது மக்கள் போக்குவரத்திற்கும் பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற்கண்ட இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று வர அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications