திமுகவில் ஆறுகுட்டி.. ‘வாக்குமூலத்தால் அதிமுக ‘தலை’களுக்கு சிக்கல்’ - கோடநாடு வழக்கில் திருப்பம்?!
கோவை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, கோடநாடு வழக்கு விசாரணைக்கு மூன்று முறை ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அவர் திமுகவில் இணைந்திருப்பதன் முலம் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி, நேற்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கோவை மாவட்ட அதிமுகவில் முக்கிய நபராக பார்க்கப்படும் ஆறுகுட்டி நேற்று மாலை பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
கோடநாடு வழக்கில் முக்கிய தொடர்புடைய டிரைவர் கனகராஜ், ஆறுகுட்டியிடம் டிரைவராக இருந்தவர். அவர் மூலமாகவே ஜெயலலிதாவுக்கு அறிமுகமானார். ஆறுகுட்டி திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் கோடநாடு வழக்கில் திருப்பம் ஏற்படுமா என பரபரப்பு எழுந்துள்ளது.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஆறுகுட்டி. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவின்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்தார். இதனால், எடப்பாடி பழனிசாமியால் ஓரங்கட்டப்பட்டார்.

இருவர் மீதும் கோபம்
கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு பெரும் செல்வாக்கு இருக்கும் நிலையில், அங்கிருந்து ஆறுகுட்டி, ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்தது அனைவராலும் கவனிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர் என்பதன் காரணமாகவே 2021 தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. ஓபிஎஸ் ஆதரவாளராக வலம் வந்த இவர் சில காலமாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கினார். ஓபிஎஸ் மீதும் அதிருப்தி அடைந்தார்.

அதிமுக பிளவு
சமீபத்தில், மீண்டும் அதிமுகவில் மோதல் வெடித்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்வது சரியல்ல. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவருமே ஒருங்கிணைப்பாளர் பதவிகளை விட்டு விலகி வேறு யாரிடமாவது கட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என பேசி இருந்தார். இதனால், சசிகலா டிடிவி தினகரன் தரப்பிடம் அவர் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு எந்தவொரு தகவலும் வரவில்லை.

செந்தில் பாலாஜி
இந்நிலையில் தான், முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கோவை வரவிருப்பதையொட்டி, மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்கும் அசைன்மெண்ட்டை மேற்கொண்டார் செந்தில் பாலாஜி. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் மாஜிக்கள் பலருக்கும் தூது விட்ட செந்தில் பாலாஜிக்கு, ஆறுகுட்டி, ஓகே சொல்லவே நேற்று திமுகவில் இணைந்திருக்கிறார் ஆறுகுட்டி.

கோடநாடு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் இதுவரை மூன்று முறை விசாரணை நடத்திய நிலையில் தற்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது மகன் அசோக், தம்பி மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன் ஆகியோரிடம் கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. தனிப்படை விசாரணையில் ஆறுகுட்டி வாக்குமூலம் அளித்ததாக கூறப்பட்டது.

ஜெயலலிதா டிரைவர்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதன்மையான நபரான கனகராஜ் சம்பவம் நடந்த சில நாட்களில் சாலை விபத்தில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த இவர், ஆறுகுட்டியிடமும் ஓட்டுநராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அதன் அடிப்படையில் ஆறுகுட்டி மற்றும் அவரது மகன், உதவியாளர் உள்ளிட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.

ஆறுகுட்டி வாக்குமூலம்
கோடநாடு வழக்கு விசாரணையில் முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டியின் வாக்குமூலம் மிக முக்கியமானது என்று கூறப்படுகிறது. ஆறுகுட்டி மூலமாகவே ஜெயலலிதாவுக்கு ஓட்டுநராகியுள்ளார் கனகராஜ். இதனால் கனகராஜ் தொடர்பான கேள்விகளை துருவித் துருவி கேட்டுள்ளது தனிப்படை. ஆறுகுட்டி அளித்துள்ள வாக்குமூலம், அதிமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு எதிராக இருப்பதாக கூறப்பட்டது.

திருப்பம் ஏற்படுமா?
இந்நிலையில், ஆறுகுட்டி திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணையை திமுக அரசு தீவிரமாக கையில் எடுத்த நிலையில், கோடநாடு வழக்கில் முக்கிய வாக்குமூலத்தை அளித்ததாக கருதப்படும் ஆறுகுட்டி திமுகவில் இணைந்துள்ளதால், இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படுமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் ஏற்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications