மிரள வைத்த மங்களூர் குக்கர் குண்டு! கோவைக்கு வந்து சென்ற குற்றவாளி ஷாரித்! ஜமேஷா முபீனுடன் தொடர்பு?
கோவை : மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதிக்கு போலீசார் பூட்டு போட்டு உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் ஓடும் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என கர்நாடக மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரித் என்பவரின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். முகமது ஷாரித் ஏற்கனவே கடந்த 2020"ம் ஆண்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

முகமது ஷாரித்
அவர் கடந்த 2021 ஜூலை மாதம் ஜாமீனில் விடுதலையானார். முகமது ஷாரித் மீது பல்வேறு வழக்குகள் இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் 4ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக தகவலின் அடிப்படையில் முகமது யாசின், முஜ் முனீர் என்ற இருவரை கர்நாடக காவல் துறை கைது செய்ததாக கூறப்படுகின்றது. இந்த வழக்கிலும் முகமது ஷாரித்தை கர்நாடக மாநில போலீசார் தேடி வந்தனர்.

கோவையில் முகாம்
இந்நிலையில் ஜாமினில் வந்த பின் தலைமறைவாக இருந்த முகமது ஷாரித் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் என்ற லாட்ஜில் கடந்த செப்டம்பர் மாதம் வந்து தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அங்கு தங்கியிருந்த தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் உதகையை சேர்ந்த சுரேந்திரனை சந்தித்தாகவும் கூறப்படுகின்றது. சுரேந்தரனின் ஆதார் கார்டை பயன்படுத்தி மொபைல் சிம்கார்டு வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

கோவை கார் வெடிப்பு
சுரேந்திரனை உதகை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமது ஷாரித்திற்கும், தனியார் பள்ளி ஆசிரியர் சுரேந்திரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மங்களுர் ஆட்டோ வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முகமது ஷாரித்தும் - கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபீனுக்கும்
ஏற்கனவே தொடர்பு இருக்கிறதா..?

ஜமீஷா முபீன்
கோவையில் ஏதாவது சந்திப்பு நிகழ்ந்து இருக்கின்றதா என்ற கோணங்களில் கோவை போலீசாரும் விசாரணையை துவங்கியுள்ளனர். முகமது ஷாரித்தின் எண்ணில் இருந்து கோவையில் உள்ள நபர்களுக்கு பேசி இருக்கின்றாரா என்ற கோணத்திலும் விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கர்நாடக போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொள்ள கோவை வர இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

லாட்ஜ் உரிமையாளர்
மேலும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதி மகிழ் வியன் அகம் (MMV) என்ற தங்கும் விடுதியில் கடந்த செப்டம்பர் தங்கி இருந்தார் என்கின்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அந்த விடுதிக்குச் சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் விடுதி உரிமையாளர் காமராஜ் என்பவரை விடுதியை பூட்டி விட்டு விசாரணைக்கு வருமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications