வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முக்கிய அறிவிப்பு
கோவை: இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 தொடர்பாக, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், நடைபெற்ற சிறப்பு முகாம்களை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் அளித்தார்.
.
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கடந்த 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.மேற்கண்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் பூர்த்தி செய்து, இந்திய தேர்தல்ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து, தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடையவுள்ள தகுதியான நபர்களும் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவம் அளித்து
வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம்- 7, பெயர் திருத்தம் மற்றும் வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், மொபைல் எண் இணைப்பு, புகைப்பட மாற்றம், பாக மாற்றம் செய்திட படிவம்-8-ம் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் 18.01.2026 வரை அளிக்கலாம்.
மேலும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்ய, 1950 என்ற
எண்ணிற்கு SMS அனுப்பி (அல்லது) https://voter.eci.gov.in என்ற இணையதள முகவரியினை அனுகி அல்லது சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் (BLO) உள்ள வாக்காளர் பட்டியலிலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும், இப்பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று (27.12.2025), நாளை (28.12.2025) மற்றும் சனிக்கிழமை (03.01.2026) ஞாயிற்றுக்கிழமை (04.01.2026) ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
அதன் படி, மாநகராட்சி ஆணையாளர் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 தொடர்பாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் தொடர்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அப்பநாயக்கன் பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, துடியலூர் ரயில் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சக்தி சாலை சரவணம்பட்டி மாநகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் காளப்பட்டி சாலை நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது, வருவாய் கோட்டாட்சியர் (கோயம்புத்தூர் வடக்கு) ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் திரு.முருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.












Click it and Unblock the Notifications