மனநோயால் போதைப் பழக்கங்களுக்கு அடிமை.. தடுக்க 200 கோடி பேருக்கு யோகா.. ஜக்கி வாசுதேவ் பேச்சு!
ஈஷா சார்பில் 200 கோடி மக்களுக்கு யோகா கற்றுத்தரப் போவதாக கூறியுள்ளார் ஜக்கி வாசுதேவ்.
கோவை : மனநோய்களால் பாதிக்கப்பட்ட பலர் போதைப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்களை தேடிச் செல்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில் ஈஷா சார்பில் அடுத்த 24 மாதங்களில் 200 கோடி மக்களுக்கு எளிய முறையில் யோகா கற்றுத்தரப்படும் என ஈஷா யோகா குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
மகா சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய ஜக்கி வாசுதேவ், மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் போதைப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்களை தேடிச் செல்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

மகா சிவராத்திரி
ஒவ்வொரு ஆண்டும் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறும். நாடு முழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். அந்தவகையில், நேற்று ஈஷா யோகா மையத்தில் சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பங்கேற்றார்.

இசை நிகழ்ச்சி
ஈஷாவில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் விடிய விடிய நடைபெற்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப்புறக் கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் பங்கேற்று இரவு முழுவதும் பாடல்களை பாடி இசை நிகழ்ச்சி நடத்தினர்.
நள்ளிரவு மற்றும் அதிகாலை பிரம்ம முகூர்த்த காலத்தில் ஜக்கி வழிநடத்தும் தியான நிகழ்வுகளும் நடைபெற்றன.

ஜக்கி பேச்சு
ஈஷா யோகா மைய வளாகத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவ், குடியரசுத் தலைவர் நம்முடன் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. மனித குல மேம்பாட்டுக்காக 112 வகையான தொழில்நுட்பங்களை வழங்கினார் ஆதியோகி. மூன்று வழிகளில் அவற்றை போதித்தார். முதலாவதாக தன்னிடம் கற்ற ஏழு சப்தரிஷிகளுக்கு போதித்தார். பார்வதிதேவி யோக அறிவியல் மூலம் மனித அகநிலையின் தன்மையையும், மனித படைப்பின் தன்மையையும் ஆராய்தல் குறித்து மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். சிவனிடம் சென்று தனக்கும் கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டார்.

மூன்று வழிகளில்
அதற்கு சிவன் தனது மடியில் அமர்ந்து கொள் எனக்கூற, அவரின் ஒரு பாதியாக பார்வதி தேவியை மாற்றினார். இதுவே அர்த்தநாரி என்று போற்றப்படுகிறது. ஆண் பெண் கலப்பு மூலம் நாம் அவதரித்தோம் என்பதை அர்த்தநாரி உணர்த்துகிறது. மூன்றாவது வகையை சேர்ந்த மக்கள் தன்னிடம் கற்கவோ மடியில் அமர்ந்து கொள்ளவோ வேண்டாம் என்று கூறிய ஆதியோகி, தன்னை அப்படியே பருகிக்கொள்ளுங்கள் என்றார். அவர் கூறியபடி பின்பற்றிய மக்கள் பரவசத்தை அடைந்தனர்.

மந்திரம்
மகா சிவராத்திரி என்ற இந்நாளில் உலகம் குறித்தும் தங்களை குறித்தும் மக்கள் எந்த அளவு தெரிந்து வைத்துள்ளனர் என்பதை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. பலவிதமான மக்களாக இருந்தாலும் பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் ஒரே நாடாக இருந்துள்ளோம். நம்மை பாரதம் என்று தான் அழைத்தனர். இதற்கு காரணம் நம் மக்கள் அனைவரும் உண்மையையும், தீர்வுகளையும் தேடுபவர்கள். வெறும் ஆறுதலை தேடும் விசுவாசிகள் அல்ல. 'ஓம் நமசிவாய' மந்திரத்தின் பங்ஜாட்சரங்கள் பஞ்ச பூதங்களை குறிக்கின்றன. இது சப்தங்களின் அற்புதமான வடிவியலாகும். ஒருவர் இதை பயன்படுத்த கற்றுக்கொண்டால் வாழ்வில் முன்னேற்றத்துக்கும், பேரின்பத்துக்கும் வழி வகுக்கும்.

போதைப் பழக்கங்கள்
இன்று உலகளவில், உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் அனைவரும் மனநோய் குறித்து பேசி வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் போதைப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்களை தேடிச் செல்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில் ஈஷா சார்பில் அடுத்த 24 மாதங்களில் 200 கோடி மக்களுக்கு எளிய முறையில் யோகா கற்றுத்தர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார் ஜக்கி வாசுதேவ்.












Click it and Unblock the Notifications