இனிமே இப்படி பண்ண மாட்டேன்னு சொல்லு.. கோவையில் சீனியர் மாணவரை பெல்டால் அடித்த ஜூனியர்கள்
கோவை: கோவை மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த சீனியர் மாணவர் ஒருவரை பிடித்து ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டைய கழற்றி முட்டங்கால் போட வைத்து, "இனிமே இப்படி பண்ண மாட்டேன்னு சொல்லு" என்று கூறி அடித்து தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.
கோவை மதுக்கரையில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கல்லூரி விடுதியில் மாணவர்களின் அறைக்குள் புகுந்த சீனியர் மாணவர் ஒருவர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது.

கண்ணீர் விட்டு அழுத போதும்
இதைப்பார்த்த அந்த அறையில் இருந்த ஜூனியர் மானவர்கள், பணத்தை திருடியதாக சொல்லப்படும் சீனியர் மாணவரை பிடித்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மாணவரை முழங்கால் போடுமாறு கூறியும் இனிமே அப்படி பண்ண மாட்டேன்னு சொல்லு.. போலீசை கூப்டுறா எனக் கூறி பெல்டால் அடிக்கிறார்கள். சீனியர் மாணவர் கண்ணீர் விட்டு அழுத போதும் இரக்கமின்றி மாணவர்கள் சுற்றி நின்று கொண்டு கையை கீழே போடக்கூடாது. போட்டால் அடிப்போம் என துன்புறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ பரவி வருகிறது.
இந்த தாக்குதல் காட்சிகளை சக மாணவர் யாரோ ஒருவர் தனது செல்போனில் எடுத்துள்ளார். இந்தக் காட்சிகள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த தாக்குதல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதை பதைக்க்க வைக்கும் வகையில் இருந்தது. ஜூனியர் மாணவர்கள் 13 பேர் அடித்த காட்சிகள் பரவிய நிலையில், சம்பந்தப்பட்ட ஜூனியர் மாணவர்களை கல்லூரியில் இருந்தும் விடுதியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கருத்து
மேலும், நாளை பெற்றோரை அழைத்து வர வேண்டும் என்றும் அவர்களிடம் அறிவுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. என்னதான் சீனியர் மாணவர் திருடியிருந்தாலும் கூட அவர்களை விடுதி வார்டனிடமோ அல்லது கல்லூரி நிர்வாகத்திடமோ பிடித்து கொடுத்து இருக்கலாம் அல்லது புகாரளித்து இருக்கலாம்.
அதை விட்டு விட்டு மாணவர்களே அடித்து துன்புறுத்துவது எந்த வகையில் நியாயம்? என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சீனியர் மாணவரை தாக்கிய ஜூனியர் மாண்வர்களுக்கு உரிய அறிவுரையை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications