நைட் டியூட்டிக்கு டிமிக்கி கொடுத்த மருத்துவர்கள்.. அமைச்சர் ரெய்டால் அலறிய கோவை சுகாதார நிலையங்கள்
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இரவு நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இருப்பதே இல்லை என்பது காலம் காலமாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் தான். எதாவது எமர்ஜென்சி ஏற்பட்டால் கூட தனியார் மருத்துவமனைகளுக்கே பெரும்பாலும் மருத்துவர்கள் செல்கின்றனர்.

அப்படியே அரசு மருத்துவமனைக்குச் சென்றாலும் எதாவது எமர்ஜென்சி என்றால் மட்டுமே மருத்துவர்களுக்கு தொலைபேசியில் தகவல் அளித்து வரவழைக்கப்படுகின்றனர் என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
அதிலும் குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், ஊழியர்கள் இரவு நேரங்களில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் கரும்புக் கடை, குனியமுத்தூர், புல்லுக்காடு, மதுக்கரை, உக்கடம், குனியமுத்தூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவைக்கு வந்துள்ளார். இந்நிலையில், இரவு நேரத்தில் அதிகாரிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைச்சர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.
கோவை குனியமுத்தூர், உக்கடம், மதுக்கரை , புல்லுக்காடு , கரும்புக்கடை, உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஒரு சில இடங்களில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
ஆய்வின்போது பணியில் இல்லாத மருத்துவர் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இரவு நேரத்தில் திடீரென மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் நடத்திய ஆய்வு மருத்துவ வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications