வாட்ஸ்அப்பிலும் ஆன்லைன் தரிசன டிக்கெட். எந்தெந்த கோயில்கள்.. அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட அப்டேட்
கோவை: தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் பல்வேறு துறைகளில் சர்ப்ரைஸ் ஆய்வுகளை செய்து வருகிறார்கள். பல அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோயில்களில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் நடைமுறை செயல்படுத்தப்படும் என்று இந்துசமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இது எப்படி செயல்பட போகிறது, எதற்காக இந்த திட்டம், முதல்கட்டமாக எந்த கோயில்களில் அறிமுகமாக போகிறது உள்ளிட்டவை குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.
கோவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கோயில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திமுக ஆட்சியில் வணிக செயல்பாடுகள் அதிகமாக இருந்தது. ஏழை மக்களுக்கான திட்டங்கள் குறைவாகவே இருந்தன. இந்து சமய அறநிலையத்துறை இணையத்தில் ஆன்லைன் தரிசனத்திற்கான டோக்கன் புக் செய்வதற்கான வசதி ஏற்கனவே இருக்கிறது.

ஆன்லைன் தரிசன டிக்கெட்
கடந்த ஆட்சியில் அதை சரியாக பயன்படுத்தவில்லை. தவெக ஆட்சியில் இந்த காலத்திற்கு ஏற்ப மாற்றி ஆன்லைனில் தரிசன டோக்கன் வழங்குகிறோம். 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், 6 மாத குழந்தையுடன் வரும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யவுள்ளோம். ஒவ்வொரு கோயில்களிலும் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பேர் தரிசனம் செய்ய முடியும் என்று அளவீடு செய்வோம்.
இந்து சமய அறநிலைத்துறைக்கு கீழ் 40,000க்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோயிலுக்கு ஏற்ப ஆய்வு மேற்கொண்டுள்ளோம். அதனடிப்படையில் டோக்கன் வழங்கப்படும். தினசரி தரிசனத்திற்கு அனுமதி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களில் திடீர் கூட்ட நெரிசல் பிரச்சனையை சரி செய்ய முடியும். சாதாரண மக்களுக்கு கோயில்களிலும் தனி கவுண்டர்கள் மூலம் தரிசன டோக்கன் வழங்கப்படும்.
வாட்ஸ் அப் மூலமாகவும்
உள்ளூர் மக்கள் தரிசனம் செய்வதற்கும் வசதிகள் செய்யப்படும். டோக்கன் முறை எல்லா நாட்களிலும் கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கன் முன்பதிவு செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்துவிட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் குறித்த முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். போலி டோக்கன், கோயில் வாசலில் நின்று பணம் பெற்று தவறான முறையில் கோயிலுக்கு அழைத்து செல்வது போன்றவற்றை ஒழிப்போம்.
வாட்ஸ்அப் மூலமாக டோக்கன் வழங்க ஆய்வு செய்கிறோம். முதலில் ஒரு சில கோயில்களில் மட்டும் பரிசார்த்திய முறையில் ஆன்லைன் டோக்கன் முறையை செயல்படுத்த இருக்கிறோம்.
படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவோம். திருப்பரங்குன்றத்தில் முதலமைச்சர் எடுப்பது தான் இறுதி முடிவு. கோயில்களில் யானைகள் புத்துணர்வு முகாம் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.












Click it and Unblock the Notifications