"50% வரியை டிரம்ப் போடவில்லை.. வரி போடச் சொன்னதே மோடிதான்".. ஆ.ராசா தாக்கு!
திருப்பூர்: "அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்" என்று திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், "மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50% வரி. 50% வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்" எனப் பேசியுள்ளார்.
திமுக கூட்டணி சார்பில், அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் கடுமையான வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடை தொழிலுக்கு ஏற்பட்ட பாதிப்பை எதிர்த்து, மத்திய அரசைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பங்கேற்றன. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள், அமெரிக்காவின் வரிவிதிப்பு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, "அமெரிக்காவின் அத்துமீறலை தடுக்க மறுக்கிறதே மோடி அரசு. அதற்கு என்ன காரணம்? மேத்தா ஒரு கவிதை எழுதினார். "சிலம்பை உடைத்து என்ன பயன்? அரியணையிலும் அதே கள்வன்". 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
இது நம் தேசத்தின் மீது நடத்தப்படுகிற போர். டிரம்ப் எதிர்பார்த்த மாதிரி நீங்கள் இல்லை, அது நீங்களும் கூட்டுக்களவாணி. பஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு 2 நாள் முன்பாக அமெரிக்கா, இந்தியாவிடம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்ததாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறினார். நமக்கு அண்டை நாடான பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்துவதை எங்கோ இருக்கும் அமெரிக்கா சொல்லும் வரை நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்டேன்.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன், நான் தான் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துவைத்தேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை சொன்னார். அது உண்மையா பொய்யா என பிரதமர் சொல்லவில்லை. மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி.
அமெரிக்கா அமைச்சர் பீட்டர் நவ்ரோ இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அவரது பேட்டியில் 2 வார்த்தைப் பிரயோகங்கள் மிக முக்கியமானது. உக்ரைனில் நடப்பது மோடி போர். இந்தியாவில் நடப்பது பிரமாணிய சுரண்டல். எனப் பேசியுள்ளார்" எனக் கூறியுள்ளார் ஆ.ராசா.












Click it and Unblock the Notifications