தமிழகத்திலேயே பக்கா ஷேப்பாக இருக்கும் ஓதிமலை.. முருகப்பெருமான் பற்றிய சுவாரஸ்யங்கள்.. அதிசய காடு!
கோவை: கோவை மாவட்டம், சிறுமுகை அருகே உள்ள பெதிகுட்டையில் அமைந்துள்ள ஓதிமலைக்கு ஒரு சிறப்பு உண்டு.
சத்தியமங்கலம் அருகே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோயில் அமைந்துள்ளது. ஓதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீமுருகபெருமான் அருள்பாலிக்கிறார். இதனால் இந்த அமைப்பு ஆதிபிரம்ம சொரூபம் என அழைக்கப்படுகிறது.
ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. 1000 அடி உயரத்தில் மிகவும் செங்குத்தாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலையில் உள்ள கோயிலுக்கு செல்ல தோராயமாக 1770 படிக்கட்டுகள் உள்ளன. இந்த கோயில் மலை உச்சியில் 2140 அடி உயரத்தில் காணப்படுகிறது.

சிறப்பான வடிவம்
தமிழகத்திலேயே சிறப்பான வடிவம் கொண்ட மலை என்றால் அது கோவை மாவட்டத்தில் இருக்கும் ஓதிமலைதான். அடிபாகம் வட்டவடிவமாகவும் மேல் பாகம் சரியான கூம்பு வடிவத்திலும் காணப்படுகிறது. இந்த கோயிலுக்கு செல்ல கைப்பிடிகள் ஏதும் கிடையாது. வெயில் நேரத்தில் மலை ஏறுவது கடினமாக இருக்கும்.

சுவாமி மலை
இந்த தலம் மிகப் பழமையான பாடல் பெற்ற முருகன் கோயிலாகும். சுவாமி மலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகபெருமான் ஓதிமலையில்தான் வேதத்தை உபதேசித்தார் என்கிறது ஐதீகம். சிவனுக்கே வேதம் ஓதி உபதேசம் செய்ததால் இந்த தலம் ஓதிமலை என அழைக்கப்படுகிறது.

முருகன்
முருகனின் பெயரும் ஓதிமலை முருகன். 18 சித்தர்களில் போகர் சித்தர் ஓதிமலையில் முதலில் முருகனை தரிசித்தார். இதையடுத்து அவர் பழனி சென்றார். இந்த மலையில் பூதிக்காடு என்ற பகுதி இருக்கும். இது வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இங்குதான் போகர் முருகப்பெருமானை நினைத்து யாகம் நடத்தினார்.

விபூதிக்காடு
அதனால் இந்த மண்ணே விபூதியாக வெண்மையாக இருக்கிறது. விபூதிக்காடுதான் மருவி பூதிக்காடு என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூ வைத்து உத்தரவு கேட்பார்கள். கேட்ட வரத்தை கொடுப்பார் இந்த முருகன். இந்த மலையில் மயில்கள், குரங்குகள், பலவண்ணப் பறவைகள் காணப்படுகின்றன. ஓதிமலை முருகனை கஷ்டப்பட்டு மலையேறி தரிசிப்பதால் மறைமுக இடர்கள் ஓடி மறையும். சிறுமுகை வனப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் காணப்படுகின்றன.












Click it and Unblock the Notifications