கோவை கொடூர சம்பவம்.. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முதல்வர் மன்னிப்பு கேட்பாரா.. பாமக திலகபாமா சுளீர்
கோவை: கோவை விமான நிலையம் பின் பகுதியில் ஆண் நண்பருடன் காரில் இருந்த தனியார் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இளைஞர்களை குடிநோயாளிகளாக மாற்றி இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கும் தமிழக அரசின் மேல் தான் குற்றம் என்றும் பாமக திலகபாமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாமக திலகபாமா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் குற்றவாளிகளை அடையாளம் காட்டி இருந்தால் சந்தோஷம். தமிழக இளைஞர்களை குடி நோயாளிகளாக ஆக்கி வைத்துள்ளார்கள். குற்றவாளிகளை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் தமிழக அரசை தான் நான் குற்றம் சாட்டுவேன்.

மன்னிப்பு கேட்பாரா முதல்வர்
பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்து முதல்வர் சாரி கேட்பாரா?. என்னால்தான் அவர்கள் குடித்தார்கள் என்னால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்பாரா?. இப்போது பெண்ணுக்கு கூட பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என பகிரங்கமாக மன்னிப்பு கேட்பாரா. பிறக்கும்போது அனைவரும் நன்றாகத் தானே பிறக்கிறார்கள். எங்கு அவன் குடி நோயாளியாக மாறுகிறான்.
அவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்துவிட்டு போதை பத்தவில்லை என இப்போது கஞ்சாவையும் கொடுக்கின்றனர். இலங்கையும் தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை இளைஞர்களை சீரழிப்பதற்காக இருக்கிறார்களா என சந்தேகப்படும் இடத்தில் இருக்கிறோம். சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தண்டனை கொடுப்பதைவிட அவர்களை இந்த நிலைக்கு மாற்றி வைத்திருக்கும் தமிழக முதல்வருக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்.
3 பேரை சுட்டு என்ன பலன்
போதைப் பொருளை முழுவதும் ஒழிக்காமல் 3 மூன்று பேரை சுட்டு என்ன பலன் கிடைக்கப் போகிறது. ஊருக்குள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை முதலில் அகற்ற வேண்டும். இல்லையெனில், ஊருக்குள் இருக்கும் கடைகளைக் குறைக்கவாவது செய்யுங்கள். குடியை விற்பது அரசின் கொள்கையாக இருக்கிறது. அப்போது சாராயக் கடைக்கு அரசு காவல் நிற்கும். தமிழக அரசு காவல் துறை மேல் நம்பிக்கை குறைந்துவிட்டது.
ஒரு பெண்ணின் தலைமுறையை அழிக்கும் பாவத்தை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். எதுவாக இருந்தாலும் நியாயமாக செய்யுங்கள். அரசின் கொள்கையாக போதை இருக்கும் வரை, இந்த வருமானத்தை வைத்து தான் ஆட்சி நடக்கிறது முதல்வர் கூறும் வரை இது எதுவும் மாறாது. நேபாளம் போல கிளர்ந்து எழுந்து எங்கள் தலைமுறையை ஏன் குடி நோயாளியாக மாற்றுகிறீர்கள் என அடித்து கேட்கும் இடத்தில் இருக்கிறோம்.
போதைப் பொருள் ஒழிப்பு
அந்தப் பெண் உண்மையாகவே குற்றவாளிகளை அடையாளம் காட்டி இருக்கிறார்களா என மாநகர காவல் ஆணையரிடம் கேட்டிருக்கிறோம். போதைப் பொருள் ஒழிப்பிற்கு கோவையில் என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டுள்ளோம். அந்தப் பெண் அடையாளம் காட்டி தான் குற்றவாளிகளை பிடித்ததாக கூறியுள்ளனர்.
காவல் துறை எங்களுக்கு நீதி கொடுக்குமா என்கின்ற சந்தேகம் வரக் கூடாது. உண்மைகள் எவ்வளவு நாளாக இருந்தாலும் வெளியே வரும். காவல்துறை அரசின் பதிலாக மட்டுமே இருக்கிறார்கள் அது போதுமானதாகவில்லை. நேரில் சென்று அந்தப் பெண்ணை பார்த்து காயப்படுத்தாமல் இருக்க விரும்புகிறேன். இந்த வழக்கில் எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்த தலைமுறைக்கான தீர்வாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications