எய்ம்ஸில் இல்லாததா கோவையில் இருக்கு? மருத்துவமனையில் மனைவி.. ராஜ்நாத் சிங்கின் திடீர் கோவை விசிட்!
கோவை: கோவையிலுள்ள பிரபல மருத்துவமனையான கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் மனைவிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்ததால் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். வட இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் போன்ற பெரிய மருத்துவமனைகள் இருக்கும் நிலையில் கோவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சிகிச்சை பெற என்ன காரணம்? என்பது குறித்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் இருக்கிறார். தேசிய அளவில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கோவைக்கு வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவரது மனைவி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதன் காரணமாகவே அவர் கோவைக்கு வந்திருப்பதாக கூறப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங்.

72 வயதான சாவித்திரி சிங் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள பிரபலமான கங்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அவரது இரு மகன்களும் மகளும் கவனித்து வந்தனர். இந்நிலையில் இன்று கோவைக்கு வந்து கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சாவித்திரி சிங்கை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார் ராஜ்நாத் சிங்.
மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். இதற்காக இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் கோவை வந்த அவர் கார் மூலம் கோவை மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள கங்கா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுமார் 1.45 மணி நேரம் தனது மனைவியுடனிருந்து சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர் பின்னர் மாலையில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக மருதமலை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. பின்னர் மாலை ஆறு முப்பது மணிக்கு மருதமலை கோவிலுக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் முருகப்பெருமானை மனம் உருகி வேண்டி தரிசனம் செய்தார். தொடர்ந்து மீண்டும் தனது மனைவி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.
இந்நிலையில் வட இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் போன்ற பிரலமான மருத்துவமனைகள் இருக்கும் நிலையில், ராஜ்நாத் சிங் தனது மனைவியை கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தது ஏன்? என விசாரித்த போது முக்கிய தகவல் கிடைத்தது.
மத்திய அமைச்சர் ராஜநாத் சிங்கின் மனைவி சாவித்திரி சிங்குக்கு முதுகு தண்டுவடத்தில் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வட இந்தியாவில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அது குணமாகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் மீண்டும் பிரச்சனை வந்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தான் அவர் கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்த மருத்துவமனையில் முதுகு தண்டுவட சிகிச்சைக்கென்றே பிரத்தியேக கருவிகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அங்கு சிகிச்சை எடுத்தால் விரைவில் குணமாகும் என தெரிந்து தான் ராஜ்நாத் சிங் தனது மனைவியை இங்கு அனுமதித்தார் என்கின்றனர் மருத்துவமனை வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications