99% முடிந்த பேச்சுவார்த்தை.. அடுத்து தவெகவில் இணைகிறீர்களா? செங்கோட்டையன் கொடுத்த பதில்!
கோவை: தவெகவில் இணைவதாக வந்த தகவல் தொடர்பான கேள்விக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மவுனமாக சென்றுவிட்டார். 50 ஆண்டுகளாக அதிமுகவுக்காக உழைத்ததாக கூறிய செங்கோட்டையன், மிகுந்த மனவேதனையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை மறுநாள் தவெகவில் இணைய உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. செங்கோட்டையனின் உறவினர் விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தையில் செங்கோட்டையனுக்கு தவெகவின் அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்க விஜய் முன் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து செங்கோட்டையன் பேசுகையில், 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏற்றத் தாழ்வுகளை கடந்து அதிமுவுக்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசுதான் இந்த நீக்கம். அடிப்படை உறுப்பினராக கூட இருக்க கூடாது என்று நீக்கி இருக்கிறார்கள். என்னுடைய மனவேதனை உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தவெகவில் இணைகிறீர்களா என்று தகவல் வெளியாகி இருக்கிறது. உங்களின் மெளனத்தை சம்மதம் என எடுத்துக் கொள்ளலாம் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன் மெளனமாக சென்றார். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார்.
தேவர் ஜெயந்தி விழாவின் போது அவர்கள் இருவருடன் இணைந்து தேவர் நினைவிடத்தில் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். இதன்பின் செங்கோட்டையனின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. திடீரென தவெகவில் இணைய செங்கோட்டையன் முடிவு எடுத்திருப்பது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
அதேபோல் தவெகவில் இணைவதற்கு முன்பாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ஆகியோருடன் செங்கோட்டையன் பேசி வருகிறார். இதனால் செங்கோட்டையன் தவெகவில் இணைவது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications