Senthil Balaji: கோவை தெற்கு தொகுதியில் வாகை சூடிய செந்தில் பாலாஜி
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆட்சியை யார் பிடிப்பார்கள் என்பதுடன் கோவையின் நிலவரத்தையும் பலரும் உற்று கவனித்து வந்தனர். அதிலும் கோவை தெற்கு தொகுதியின் நிலவரத்தை தமிழகமே எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில், திமுக கோவை தெற்குத் தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் 1,88,878 வாக்குகள் உள்ளன. கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் அங்கு 1,58,799 வாக்குகள் பதிவாகின. மொத்தம் 20 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. திமுகவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுகவில் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனன், தவெகவில் செந்தில் குமார், நாம் தமிழர் கட்சியில் பேரறிவாளன் என்று மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

சாதிப்பாரா செந்தில் பாலாஜி
கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை தேர்தல் களம் திமுகவுக்கு தோல்வியை தான் கொடுத்துள்ளது. கோவையில் தொடர்ந்து அதிமுக தான் வெற்றி பெற்று வருகிறது. இதை சரி செய்வதற்காக திமுக சார்பில் கரூரில் இருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு ஸ்பெஷல் அஸைன்மென்ட் கொடுத்து ஸ்டாலின் அனுப்பினார். கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
பிரசாரத்தின்போதே கோவை தெற்கு தொகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. தமிழ்நாடே உற்று நோக்கும் தொகுதியாக மாறியது. தேர்தல் முடிவுக்கு முன்பாகவே செந்தில் பாலாஜி கோவை தெற்கு தொகுதியில் குடிபெயர்ந்தார். அவரின் அடுத்தடுத்த நகர்வுகளால் அதிமுக அதிர்ச்சியடைந்தது. கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், அவற்றை மீறி தேர்தல் நடைபெற்றது
இந்நிலையில், 11 வார்டுகளைக் கொண்ட இந்தத் தொகுதியில் வாக்குப் பதிவு எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இதில், செந்தில் பாலாஜி பந்தயம் அடிப்பாரா, பின்னடைவைச் சந்திப்பாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. அதேசமயம் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், தவெக வேட்பாளர் செந்தில் குமார் அதிக வாக்குகளைப் பெறுவார்களா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி 2271 வாக்குகள் வித்தியாசத்தில், 59 ஆயிரத்து 724 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் 57,453 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜூனன் 31,689 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட பேரறிவாளன் 5,062 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications