ஜனநாயகன் படத்தில் ஊழலை ஒழிச்சுட்டு பேசுங்க விஜய் - சிங்கை ராமச்சந்திரன்
கோவை: ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும்போது அரசாங்கம் நிர்ணயித்த தொகையில் மட்டும் கட்டணம் வசூல் செய்து ஊழலின் முதல் படியாக விஜய் ஆரம்பித்தால், ஊழலைப் பற்றி நீங்கள் பேசுவதை வரவேற்போம் என்று அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியுள்ளார். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள். விஜயைப் போல் அப்பாவின் ஆதரவால் வளராமல் சொந்த உழைப்பால் முன்னேறியவரிடம் அதிமுக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி தற்போது யாரிடம் இருக்கிறது என தெரியவில்லை என விஜய் பேசி இருந்தது பேசுபொருள் ஆகியிருந்தது. இதற்கு அதிமுகவை சேர்ந்த பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் பதில் அளித்து பேசி இருந்தனர். இந்த நிலையில் அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் வீடியோ வெளியிட்டு விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளதாவது:

பல்வேறு துறைகளிலும் இருக்கும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை வரவேற்கிறேன். அதே சமயம் விஜய் தான் சார்ந்து இருக்கக்கூடிய திரைத்துறையில் இருக்கும் ஊழலை முதலில் ஒழிக்க வேண்டும். ஒரு திரைப்படம் வெளியாகினால் அதற்கான டிக்கெட் விலை அரசு நிர்ணயித்துள்ளது 100 முதல் 150 ரூபாய் வரை. ஆனால், ரசிகர்களுக்கான காட்சிகள் என 2,000 முதல் 5,000 ரூபாய் வரையில் எல்லாம் டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறார்கள்.
பணம் இருப்பவர்கள் வாங்கலாம். அதே சமயம் ஆட்டோ ஓட்டும் தொழிலாளிகள் போன்ற எளியவர்களும் அவ்வாறு வாங்கும் சூழல் ஏற்படுகிறது. இப்படி எல்லாம் பணத்தை சம்பாதித்துக் கொள்ள முடியும் என்பதால் தான் விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கி விடுகிறார்கள். அதனால் தான் தயாரிப்பாளர்கள் உங்களுக்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் தருகிறார்கள்.
நீங்கள் கூறும் உங்கள் கரியரின் உச்சம் 250 கோடி ரூபாயை விட்டு வருகிறேன் என்று கூறுகிறீர்கள். இதுபோல 150 ரூபாய் டிக்கெட்டுகளை முதல் வாரத்தில் 2,000 ரூபாய் வரை விற்று விட முடியும் என்பதால் தான். எனவே, முதல் ஊழல் இங்கே தான் இருக்கிறது. அவை கருப்பு பணமாகத்தான் பெறப்படுகின்றன. இதனால், நாட்டுக்கோ, பொருளாதாரத்துக்கோ எந்தப் பயனும் இல்லை. எனவே, ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் போது அரசாங்கம் நிர்ணயித்த தொகையில் மட்டும் கட்டணம் வசூல் செய்து ஊழலின் ஒதுக்கும் முதல் படியாக இந்த விஷயத்தை விஜய் ஆரம்பித்தால் ஊழலைப் பற்றி நீங்கள் பேசுவதை வரவேற்பேன்.
யாரிடம் அதிமுக உள்ளது என கேட்டீர்களே?. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு மாநிலமும் ஐந்தாண்டுகளில் 11 மருத்துவக் கல்லூரியை கொண்டு வராமல் இருந்த நிலையில், 11 மருத்துவக் கல்லூரியை கொடுத்தவர் கையில் அதிமுக இருக்கிறது. 7.5 % இட ஒதுக்கீடு கொடுத்து அரசுப் பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கானவர்களை மருத்துவர்கள் ஆக்கி காட்டியவரிடம் அதிமுக இருக்கிறது.
60 ஆண்டு கால பிரச்சனையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை திட்டத்தை முடித்துக் கொடுத்தவரிடம் இருக்கிறது. டெல்டாவை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தவரிடம் இருக்கிறது. மின் கட்டணத்தை உயர்த்தாமல், சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் பார்த்துக் கொண்டவரிடம் அதிமுக என்று கூறப்பட்டவரிடம் இருக்கிறது.
கொரோனாவை சிறப்பாக கையாண்ட முதன்மை மாவட்டமாக பெயர் பெற்றவரிடம் இருக்கிறது. உங்களைப்போல அப்பாவின் ஆதரவு இல்லாமல் சுயம்புவாக ஒரு கிளைச் செயலாளராக இருந்து, முன்னாள் முதல்வராக தற்போதைய எதிர்க்கட்சி தலைவராக வளர்ந்திருப்பவரிடம் அதிமுக இருக்கிறது. 72 வயதிலும் கடந்த மூன்று மாதங்களில் பத்தாயிரம் கிலோ மீட்டர் பயணித்து 100 சட்டமன்ற தொகுதிகளில் திமுக தவறுகளை எடுத்துரைப்பவர் இடம் இருக்கிறது.
உங்களைப் போல கட்சி ஆரம்பித்து ஒன்றரை ஆண்டுகளில் அரை மணி நேரம் பேச்சும் அரை கிலோமீட்டர் ramp walk மட்டும் செய்தவரிடம் கட்சி இல்லை. இன்பநிதி உதயநிதி என பெயர்களை கேட்டாலே திரைப்படங்களுக்கு பெயர் வைப்பது போல இருக்கிறது என திமுகவிற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்த காலத்திலும் திமுக தீய சக்தி என பேசிக்கொண்டு இருந்தவரிடம் அதிமுக இருக்கிறது.
234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் இருப்பார் என நீங்கள் கூறியிருக்கிறீர்கள்... உங்களுக்கு உங்களை விட்டால் வேறு வேட்பாளர் இல்லை என நான் நினைக்கிறேன். சினிமாவில் வேண்டுமானால் நீங்கள் ஹீரோவாக இருக்கலாம்..ஆனால் 234 தொகுதிகளிலும் நிஜ வாழ்க்கை ஹீரோக்களாக சட்டமன்ற உறுப்பினர்களையும் வேட்பாளர்களையும் நாங்கள் வைத்திருக்கிறோம்.
இவர்களுக்கெல்லாம் வசனம் தேவையில்லை...start camera action தேவை இல்லை. கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் சாதாரண பெயின்டர். இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தின் போது தவெக இருந்ததா எனக்கு ஒரு தெரியவில்லை. அந்த பிரச்சனையை முன்கூட்டியே எடுத்துக் கூறிய நிஜ வாழ்க்கை ஹீரோ எங்கள் கட்சியில் இருக்கிறார்கள்.
234 தொகுதிகளும் தொகுதிக்கு 10 நிஜ வாழ்க்கை ஹீரோக்களை என்னால் காட்ட முடியும். திரைத்துறையில் விஜய் பெரிய ஹீரோவாக இருக்கலாம் ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு பிரச்சனை என்றால் நேரடியாக அணுக முடியாது. நிஜ வாழ்க்கையில் அடிப்படை தேவைகளுக்கு களத்தில் வந்து யார் பணியாற்றுவார்களோ அவர்களுக்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications