அடடே அந்த கம்பீரம்.. வெற்றிச் சிரிப்பு- இலங்கை அதிபர் மாளிகை சிம்மாசனத்தில் அமர்ந்த சாமானிய பெண்மணி!
கொழும்பு : இலங்கை அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிபர் மாளிகையின் ராஜ சிம்மாசனத்தில் சாமான்ய பெண்மணி ஒருவர் புன்னகை முகத்தோடு அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.
அரசன் நீதியற்ற ஆட்சி புரிந்தால், அரியணை வீழ்ந்து, மணிமுடிகள் சரியும் என்கிற வாக்கு இலங்கையில் இதோ நிரூபணமாகியிருக்கிறது. அந்நாட்டு மக்களின் போராட்டங்களில் தலைநகர் துவம்சமாகி ருக்கிறது.
மக்கள் புரட்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் இலங்கை அதிபர் கோத்தபய தப்பியோடியதை தொடர்ந்து, அவர் வசித்த அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

கொழும்புவில் வெடித்த போராட்டம்
இலங்கையின் பொருளாதாரத்தைச் சின்னாபின்னமாக்கிய ஆட்சியாளர்களுக்கு எதிராக தலைநகர் கொழும்புவை நோக்கி இன்று போராட்டக்காரர்கள் குழுமினர். போராட்டத்தில் கலந்து கொள்ள கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் வரிசையாக ஏராளமானோர் கொழும்பு நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். போராட்டக்காரர்கள் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

அதிபர் மாளிகை முற்றுகை
ராணுவத்தினரின் தடைகளை மீறி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய ஆயுதத்தை போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களுடன் இணைந்து கொண்டார். அவரை போராட்டக்காரர்கள் கைதட்டி வரவேற்று, தூக்கிக் கொண்டாடினர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை, ராணுவத்தினர் எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை. அவர்களைத் தாண்டி மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.

சூறையாடிய போராட்டக்காரர்கள்
ஆனால் அதற்கு முன்பே கோத்தபய ராஜபக்ச அங்கிருந்து தப்பிச் சென்றார். கோத்தபய ராஜபக்ச அங்கு இல்லாததால், போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையில் இருந்த கோத்தபயவின் அலுவலகத்தை சூறையாடினர். தொடர்ந்து அங்கிருந்த நீச்சல் குளத்தில் குதித்து உற்சாகமாய் குளித்த போராட்டக்காரர்கள், மாளிகைக்குள் புகுந்து ஒவ்வொரு அறைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

சிம்மாசனத்தில் அமர்ந்த பெண்மணி
அதிபரின் சிம்மாசனத்தில் அமர்ந்தும், சொகுசான படுக்கை அறையில் இருந்த கட்டிலிலும் அமர்ந்தும் தங்கள் வெற்றியைக் கொண்டாடினர். போராட்டக்காரர்கள் குழுவில் இருந்த பெண்மணி ஒருவர், அதிபர் மாளிகையில் வீற்றிருந்த கம்பீரமான இருக்கையில் அமர்ந்து புன்னகையோடு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் வெளியாகி தற்போது தீயாகப் பரவி வருகிறது.

முடிவுக்கு வரும் கோத்தபய ஆட்சி
இலங்கையில் வெடித்துள்ள மக்கள் கிளர்ச்சி குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் உணர்வுக்கு மதிப்பளித்து அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். இலங்கையில் வரலாறு காணாத மக்கள் கிளர்ச்சியால் ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது. இனி அனைத்துக் கட்சி ஆட்சி நடக்கும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications