சுப.வீரபாண்டியனுடன் இணைந்த கா.சு! இயக்கத்தை கலைத்து ஒரே குடையின் கீழ் ஐக்கியம்! கோவையில் நடந்த விழா!
கோவை: தமிழ்நாடு திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை கலைத்து விட்டு அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த காசு.நாகராஜன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைமையை ஏற்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் சங்கமித்திருக்கிறார்.
இரண்டு பகுத்தறிவு இயக்கங்கள் ஒன்றிணையும் விழாவுக்கு ஆன்மிகத்தில் அதிக நாட்டம் காட்டக்கூடிய அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கியிருக்கிறார்.

திராவிட இயக்கம்
பெரியார் என்ற ஒற்றை மனிதரை கொள்கையாக கொண்டு கி.வீரமணி, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், சுப.வீரபாண்டியன், என ஏராளமானோர் தலைமையில் பகுத்தறிவு இயக்கங்கள் தமிழகத்தில் உள்ளன. நோக்கம், சிந்தனை, கொள்கை என அனைத்தும் ஒன்றாக இருந்தும் இவர்கள் தனித்தனி அமைப்புகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த தமிழ்நாடு திராவிடர் கழகம் என்ற இயக்கம் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் கா.சு. நாகராசன், சுப.வீரபாண்டியனின் திராவிட இயக்கத் தமிழர் பேரவையில் இணைத்திருக்கிறார்.

இணைப்பு விழா
இதற்கான இணைப்பு விழா கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, இரண்டு அமைப்புகள் ஒன்றிணையும் விழாவில் பங்கேற்றது மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் திராவிட கொள்கை உணர்வு கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி
இந்த விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி தான் நடுநாயகமாக சிறப்பிக்கப்பட்டார். அவருடன் அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மு.கண்ணப்பன் பங்கேற்றார். கா.சு. நாகராஜன் தலைமையில் இதுவரை இயங்கி வந்த தமிழ்நாடு திராவிடர் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மஞ்சப்பை
இப்போது திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையுடன் தமிழ்நாடு திராவிடர் கழகம் இணைந்துவிட்டதால் சுப.வீக்கு இளைஞர்கள் பலம் பெருகியிருக்கிறது. இதனிடையே இந்த விழாவில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.