அதிமுக பொதுச்செயலாளர் பதவி.. இபிஎஸ்க்கு வழங்கியதை தமிழகமே கொண்டாடுது.. பெருமைப்பட்ட எஸ்பி வேலுமணி
கோவை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு இருப்பதை தமிழகமே கொண்டாடுகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறினார்.
அதிமுகவில் நிலவிய பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் நடந்த பொதுக்குழுவில் கட்சியின இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதன்பிறகு ஜூலை 13ல் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

கோவை சென்ற எஸ்பி வேலுமணி
அதிமுக தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது சொந்த மாவட்டமான கோவைக்கு சென்றார். இந்த பதவியை பெற்ற பிறகு அவர் முதல் முறையாக கோவை சென்றார். இதனால் கோவை விமான நிலையம் சென்ற அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகமே கொண்டாடுகிறது
தமிழ்நாட்டு மக்களே ஆவலுடன் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தமிழகமே கொண்டாடுகிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக்க பாடுபட்டு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

ஒருமாதமாக எடப்பாடி செய்தி தான்
கடந்த ஒரு மாதமாக பத்திரிகை, ஊடகங்களில் வேறு எந்த செய்தியும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமியை பற்றிய செய்தி மட்டும் தான் இருந்தது. இந்த எழுச்சி என்பது அவர் மீண்டும் முதல்வராக உள்ளதை உறுதி செய்கிறது. ஜெயலலிதா கொண்டுவர நினைத்த திட்டங்களை எல்லாம் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார்.

மீண்டும் முதல்வராகும் எடப்பாடி பழனிச்சாமி
வரும் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். வரும் தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் அதிமுகவின் வெற்றி உறுதியாகும். வழக்கம்போல் மூத்த நிர்வாகிகளடன் ஒற்றுமையாக இணைந்து பயணிப்போம். கட்சியில் இருந்துநீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பது பற்றி பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications