"நான் வந்துட்டேன்னு சொல்லு".. கோவை கிராம மக்களை காக்க.. கெத்தாக களமிறங்கிய கும்கி யானை முத்து
கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான தாளியூரில் நடைபயிற்சிக்குச் சென்ற நபர் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கும் வகையில் முத்து என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தின் அழகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியும், அதன் குளுகுளு காலநிலையும் தான். மலையடிவாரத்தில் உள்ள வனப் பகுதிகளில் காட்டு யானைகள், பன்றிகள், சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இரவு நேரங்களில் இந்த வன விலங்குகள் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் உணவு, குடிநீர் தேடி நுழையும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி கோவை வனச் சரகத்துக்கு உட்பட்ட தாளியூர் பகுதியைச் சேர்ந்த நடராஜ் என்பவர் அதிகாலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமான அவ்வழியாக வந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என வனத் துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி மக்கள் மற்றும் விவாசய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானையை விரட்ட கும்கி யானை அழைத்து வரப்படும் என்று வனத் துறையினர் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டதைக் கைவிட்டனர். இதைத்தொடர்ந்து, கோவை வனச் சரகத்திற்கு உட்பட்ட வனச்சரகப் பணியாளர்கள், யானை விரட்டும் காவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டன.
தொடர்ந்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து முத்து என்ற கும்கி யானை காட்டு யானைகளை விரட்டுவதற்காக வரவழைக்கப்பட்டுள்ளது. லாரி மூலம் முத்து என்கிற கும்கி யானை தாளியூர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த யானை அதிகளவில் மனித விலங்கு மோதல் நடைபெறும் பகுதியான சின்னமலைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கும்கி யானையின் வாசத்தைக் கண்டறிவதன் மூலமாக இப்பகுதிக்கு அந்த காட்டு யானை வருவதற்கு வாய்ப்பு குறைவு. வனப் பணியாளர்கள் ரோந்து மேற்கொண்டு வனப் பகுதியில் இருந்து யானை வெளியேறினால் கும்கி யானை மூலமாக விரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
கிராமத்துக்குள் யானைகள் வராமல் தடுக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் அநாவசியமாக வெளியே நடமாட வேண்டும் என்று வனத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications