இரவில் தனிமையான இடத்திற்கு எப்படி போலாம்? முதலில் அந்தப் பெண் தவறு.. கோவை சம்பவத்தில் ஜேம்ஸ் வசந்தன்
கோவை: "முதலில், அந்தப் பெண் தவறு... இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?" என்று கோவை சம்பவம் குறித்து பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரை ஒட்டிய காட்டுப் பகுதியில், இரவு 11 மணிக்கு மாணவி ஒருவர், தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த 3 இளைஞர்கள் திடீரென காரை தாக்கி, கண்ணாடியை உடைத்து, மாணவியின் ஆண் நண்பரை ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். கடுமையாக காயமடைந்த ஆண் நண்பர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு அந்த கும்பல் மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
சுட்டுபிடித்தனர்
பிறகு மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், உடனடியாக போலீசுக்கு புகார் தந்துள்ளார்.. விரைந்து வந்த போலீசார் மாணவியை மீட்டு சிகிச்சையில் அனுமதித்துள்ளனர்.. பிறகு தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேட தனிப்படை அமைத்து, இரவோடு இரவாக 3 பேரையுமே சுட்டுப்பிடித்துவிட்டனர்.
கோவையில் மாணவி மீது நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருமே கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தன்னுடைய கருத்தை சொல்லி உள்ளார்.. அதில், மாணவியின் மீதுதான் முதல் தவறு என்று கூறியிருக்கிறார்.. ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளதாவது:
முதல் தவறு பெண்ணின் மீது
1. கோவை விமானநிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.
2. முதலில், அந்தப் பெண் தவறு... இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?
இரண்டாவது பையனின் தவறு
இரண்டாவது, அந்தப் பையன் தவறு... அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா?
அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை.
வருந்தி வருந்தி அழுதாலும்...
ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.
இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள்.
இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது. தவறான நண்பனைத் தவிர்" என்று ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார்.
தனிப்பட்ட கருத்து சொல்லாதீங்க
ஜேம்ஸ் வசந்தனின் இந்த கருத்தானது சர்ச்சையாக வெடித்துள்ளதுடன், சோஷியல் முடியாவில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பி வருகிறது.
முன்னதாக, கோவை காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் தவறு என்று சிலர் சொல்கிறார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு காவல் ஆணையர், "பொதுமக்கள் யாரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை சொல்லாமல், பிறரது தனியுரிமையை மதிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தனிப்பட்ட கருத்துக்களை பரப்ப வேண்டாம்.. VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது" என்று கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications