ஒரே கேள்வியில் பிரவீன் சக்ரவர்த்தி,எஸ்ஏ சந்திரசேகருக்கு பதிலடி – காங்கிரஸ் நிர்வாகியால் திமுக ஹேப்பி
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா திமுக கூட்டணிக்கு சாதகமாகவும், எஸ்.ஏ.சந்திரசேகரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. மிகவும் வலுவான கூட்டணியாக கருதப்பட்ட திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியால் பரபரப்பு நிலவி வருகிறது. பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவுக்கு எதிராகவும், தவெகவுக்கு ஆதரவாகவும் கருத்து கூறி வருகிறார்கள்.

காங்கிரஸ் கூட்டணி
தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் நேரடியாக காங்கிரஸ் கட்சியை தவெக கூட்டணிக்கு அழைத்துள்ளார். இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கள நிலவரம், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது நிவேதித் ஆல்வா செய்தியாளர்களிடம் கூறுகையில், "விமான விபத்தில் மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் உயிரிழந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கும், மகாராஷ்டிரா மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரவீன் சக்கரவர்த்தி ஹை கமேண்ட் இல்லை
மேலும், தற்போதைய அரசியல் சூழலில் இந்தியா கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் சார்ந்த அரசியலே இண்டியா கூட்டணியின் அடிப்படை நோக்கம். வருங்கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்றார். பிரவீன் சக்கரவர்த்தி தொடர்ச்சியாக தவெக விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆல்வா, "பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சியின் ஹை கமேண்ட் கிடையாது. கூட்டணி குறித்து ஹை கமேண்ட் தான் முடிவு செய்யும். காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மூத்த உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் டெல்லியில் ஆலோசனை நடத்தியுள்ளோம். கூட்டணி தொடர்பாக உயர்மட்ட குழு உரிய அறிவிப்புகளை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.
விஜய் தந்தை
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் என்ன நினைக்கிறோம் என்பது குறித்து உயர்மட்ட குழுவில் கூறியுள்ளோம். கூட்டணி தொடர்பான வதந்திகள் ஊடகங்களில் தான் வருகின்றன" என்றார். "தவெகவுடன் காங்கிரஸ் இருந்தால் வலுப்பெறும் என்கிற சந்திரசேகரின் கருத்திற்கு, அது அவருடைய கருத்தாக இருக்கலாம். எங்கள் கட்சியை பூத் அளவில் இருந்து வலிமைப்படுத்த என்ன தேவையோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications